கோவை, மே 4- சொகுசு விடுதியில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை உட்கொள்ளும் விருந்தில்பங்கேற்று விடிய விடிய ஆட்டம்போட்ட 159 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதிக்குட்பட்ட சேத்துமடை அருகே அண்ணா நகர் பகுதி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான அக்ரிநெஸ்ட் என்கிறகேளிக்கை சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் வெள்ளியன்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துகோவையில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியுள்ளனர். தொடர்ந்து நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொகைன், போதை ஊசி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதில் போதை தலைக்கேறிய நிலையில் விடியவிடிய ஆட்டம் போட்டுள்ளனர். ஒரேநேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி போட்ட சத்தத்தில் அருகாமை கிராமத்தில் உள்ளவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டதால் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவஇடத்திற்கு சென்ற காவல்துறையினர் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை மாணவர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்கள் 159 பேரை கைது செய்தனர். இதில், கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அதிகம் இருந்தனர். இதேபோல், தோட்டத்து உரிமையாளர்கணேஷ் உட்பட மேலும் 6 பேரைகைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அதோடு, இவர்களது சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சொகுசு விடுதி உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பொள்ளாச்சியில் நடைபெற்றபாலியல் கொடூரச் சம்பவம்நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது நடைபெற்ற அத்துமீறல்கள் பொள்ளாச்சி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனுமதியற்ற சொகுசு விடுதிகள்
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரமசிவம் கூறுகையில், ஆனைமலையை அடுத்த சேத்துமடை அண்ணா நகர் பகுதியில் சொகுசு விடுதி எனும் பெயரில்பல்வேறு குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போதை பொருள் வஸ்து போன்ற குற்றங்களில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் காவல் துறை குற்றத் தடுப்பு பிரிவான உளவுத்துறைக்கு தெரியாமல் நடைபெற வாய்ப்பு இல்லை. இதுபோன்ற நூற்றுக்கணக்கான சொகுசு விடுதிகள் அனுமதியின்றி ஆனைமலை, சேத்துமடை,டாப்சிலிப் ,வால்பாறை போன்றபகுதிகளில் இன்னும் இயங்கிக்கொண்டு உள்ளது. குறிப்பாக மலைபகுதிகளில் உள்ள இயற்கைவளங்களை அழித்து உரிய அனுமதியின்றி சொகுசு விடுதிகள்கட்டப்படுகிறது. மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள சொகுசுவிடுதிகள் குறித்து வனத்துறையினர் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். கோவைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து சொகுசு விடுதிகளில் சோதனை நடத்தி, பொதுமக்களுக்கு உள்ள அச்சத்தை போக்க வெளிப்படை தன்மையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சொகுசு விடுதிக்கு சீல்
இந்நிலையில் போதை விருந்தை ஏற்பாடு செய்து, முறையான அனுமதியின்றி இயங்கி வந்த சொகுசு விடுதிக்கு சீல் வைக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி சனிக்கிழமையன்று அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.