திருப்பூர், ஏப். 22 -திருப்பூர் மாவட்டம் குண்டடம் பிஏபி உதவிப் பொறியாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், பிஏபி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திநூற்றுக்கணக்கான விவசாயிகள்திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பிஏபி பாசனத் திட்டத்தில் மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு ஐந்து சுற்றுத் தண்ணீர் வழங்க அரசு உத்தரவிட்டத்தின் அடிப்படையில் மூன்று சுற்றுத் தண்ணீர் விடப்பட்டுள்ளது. அதேசமயம் இத்திட்டத்தின் பிரதான கால்வாய் மற்றும் கிளைக் கால்வாய்களுக்கு அருகில் உள்ள மேல்பகுதி விவசாயிகள் இரவு நேரங்களில் ஹோஸ் பைப் போட்டும், குழாய் பதித்தும் தண்ணீரைத் திருடிக் கொள்வதால் கடைமடைப் பகுதி விவசாயிகளுக்குத் தண்ணீர் சென்று சேராத நிலை உள்ளது. எனவே பிஏபி அதிகாரிகள் தினமும் ஷிப்ட் முறையில் ரோந்து சென்று கண்காணித்து தண்ணீர் திருட்டைத் தடுத்து வருகிறார்கள்
குண்டடம் கால்வாயில் நீர்த்திருட்டு
இந்நிலையில் குண்டடம் கிளைக் கால்வாயில் பல இடங்களில் அத்துமீறி குழாய்கள் பதித்து தண்ணீர் திருடுவது விவசாயிகளுக்குத் தெரியவந்தது. இது பற்றி குண்டடம் பிஏபி உதவிப்பொறியாளரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்து, தண்ணீர் திருடபதிக்கப்பட்ட குழாய்களை அகற்றும்படி கேட்டுக் கொண்டனர். அதனடிப்படையில் அத்துமீறி பதிக்கப்பட்ட குழாய்களை உதவிப் பொறியாளர் அகற்றிவிட்டு அலுவலகத்தில் இருந்துள்ளார். ஏப்.11ஆம் தேதி கோகுலகிருஷ்ணன் என்பவர் அங்கு வந்து, “நான் போட்ட குழாயை எப்படி அகற்றலாம் என்று தகாத வார்த்தைகளால் பேசி உன் தலையை வெட்டி வாய்க்காலில் வீசி விடுவேன்” என்று பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளரை மிரட்டியுள்ளார்.இந்த கொலை மிரட்டல் தொடர்பாக உதவிப் பொறியாளர் குண்டடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதன் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து கோகுலகிருஷ்ணன் சுமார் 60 பேருடன் காவல் நிலையத்துக்கு வந்து, காவல் துறையினர் முன்னிலையிலேயே பிஏபி அலுவலர்கள் மற்றும் விவசாயிகளை மிரட்டி உள்ளார். அத்துடன் அன்றிரவே குண்டடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
வேடிக்கை பார்த்த காவல்துறை
இதற்குப் பிறகும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். அந்த நபரை இதுவரை கைது செய்யவும் இல்லை. பிஏபிஅலுவலகத்தை அடித்து நொறுக்கியது பற்றி 12ஆம் தேதி மீண்டும் குண்டடம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீதும் காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பிஏபி அலுவலர்களுக்குப்பாதுகாப்பு இல்லாததால் இரவுநேர ரோதுப்பணிக்குச் செல்வதில்லை. இதனால் நான்காம் சுற்றுத் தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு வார காலம் ஆகியும்பல கடைமடைப் பகுதி விவசாயிகளுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு போதிய தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயிர் செய்த விவசாயிகள்தண்ணீர் கிடைக்காமல் வேதனையில் உள்ளனர்.
ஆட்சியரகத்தில் திரண்ட விவசாயிகள்
இந்த சம்பவம் தொடர்பாக பிஏபி பாசன திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழு தலைவர் மெடிக்கல் கே.பரமசிவம் தலைமையில் பிஏபி பிரதான கால்வாய் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக மனுநீதி நாள் நடைபெறாத நிலையில், விவசாயிகள் மாவட்டஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாத நிலையில், அவர் வரும் வரை காத்திருக்கப் போவதாக தெரிவித்து விவசாயிகள் ஆட்சியர் அலுவலக மேல்தளத்தில் காத்திருந்தனர். இந்நிலையில் ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி அங்கு வந்தார். அவரிடம் நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறிய விவசாயிகள், மேற்படி சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
உயர்மட்ட கண்காணிப்பு தேவை
அத்துடன் பொதுப்பணித் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, மின்வாரியம் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளை அழைத்து ஒரு கண்காணிப்புக்குழு அமைத்து இரவு நேர ரோந்து பணிகளை உடனடியாக துவக்கி, கடைமடை வரை தண்ணீர் செல்லநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரவு நேர ரோந்து செல்லும்போது காவல் துறையினர் மூலம் உரிய பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.இந்த விபரங்களைக் கேட்டறிந்த ஆட்சியர் பழனிச்சாமி, துணை ஆட்சியர் தலைமையில் இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.கயல்விழியிடமும் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அவர் உடனடியாக தாராபுரம் டிஎஸ்பியைத் தொடர்பு கொண்டு பேசி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கையின் அடிப்படையில் விவசாயிகள் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவது பற்றி ஆலோசித்து முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.