தூத்துக்குடி:
ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தின் மூச்சுக் காற்றை நச்சுக் காற்றாக மாற்றிய, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி அறவழியில் போராடிய எங்களின் பிள்ளைகளை, கணவரை, தாய்,தந்தையரை, சகோதரனை காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டினால், தடியடியால் இழந்து தவிக்கிறோம். எங்களது உறவுகளை துடிதுடிக்கபடுகொலை செய்து, உடல் உறுப்புகளை சிதைத்த ஆலையை மூடும் வரைமறக்கவும், மன்னிக்கவும் முடியாது. ஸ்டெர்லைட் நச்சு ஆலையின் மரணக்கதவுகளை திறக்க ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருப்பு தினம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும், வீட்டின் வாசல்களில் “ஸ்டெர்லைட்டை தடைசெய்” என்று கோலமிட்டும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.தமிழக அரசின் முடிவுக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி பண்டாரம்பட்டி பகுதியில் எதிர்ப்பாளர்கள் வியாழனன்று கருப்பு தினமாக அனுசரித்தனர். இதையொட்டி அப்பகுதியில் உள்ள சில வீடுகளின் கூரையில் கருப்புக்கொடி கட்டியுள்ளனர். மேலும், வீடுகளின் முன்பு ‘‘BAN ஸ்டெர்லைட்’’ என்று கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.