tamilnadu

கோவை: அடகு கடையில் நகை மோசடி – பொதுமக்கள் முற்றுகை

கோவை, ஜூன் 1-நகை மோசடி செய்ததாகக் கூறி தனியார் நகை அடகு கடையை வாடிக்கையாளர்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதனால் பெண் ஊழியர்கள் கடையின் உள்ளே தாழிட்டு 3 மணி நேரமாக தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை ரத்தினபுரி சாஸ்திரிரோட்டில் செயல்பட்டு வருகிறதுஎன்.எஸ்.கே பான் புரோக்கர்ஸ் என்ற நகை அடமானம் வாங்கும்நிறுவனம். இந்த நிறுவனத்தை ரத்தினபுரி பொங்கியம்மாள் வீதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கடந்த 10 வருடங்களாக நடத்தி வருகிறார். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்குச் சொந்தமான தங்க நகைகளை அவசர தேவைக்காக அடமானம் வைத்துள்ளனர். அடமானம் வைத்த நகைக்கு உரிய கடன் பணத்தை முழுவதும் செலுத்தியும் கடந்த 2மாதங்களாக வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் நகைகளை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இதனால்,ஆவேசமடைந்த வாடிக்கையாளர்கள் 25-க்கும் மேற்பட்டோர் வெள்ளியன்று மாலை அந்த அடகு நிறுவனத்தை முற்றுகையிட்டனர். மேலும், நிறுவனத்தின் உரிமையாளர் முத்துக்குமார், பணிபெண்களின் பொறுப்பில் கடையைவிட்டு அடமானம் வைத்த நகைகளைக் கொண்டு வருகிறேன் என்றுசொல்லி வெளியேறி விட்டார். இந்நிலைியில் வெளியே சென்ற முத்துகுமார் வெகுநேரமாகியும் திரும்பாததால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் கூச்சலிடத் தொடங்கினர். இந்நிலையில், நிறுவனத்தின் தொழிலாளர்கள் கடையின் ஷட்டரை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர். தகவலறிந்து அங்கு வந்து ரத்தினபுரி காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். எனினும்ஆவேசமடைந்த வாடிக்கையாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல் பொதுமக்களை சமாதானப்படுத்தினார். மேலும், காவல் நிலையம் வந்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர், கடையைத்திறந்துகடை உள்ளே இருந்தமூன்று பெண்களையும் அவர்களது வீட்டிற்குக் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.