தாராபுரம், ஏப்.21 -தாராபுரத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்திய பாமகவினரை கைது செய்த காவல் ஆய்வாளருக்கு, தாராபுரம் அதிமுக நகர செயலாளர் காமராஜ் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாராபுரம், காந்திபுரம் பழனிச்சாமி என்பவரது மகன் ஜெயேந்திரன் (29). இவர் தாராபுரம் பாமக நகர செயலாளர். இவரது நண்பர் எல்ஜிஜிஎஸ் காலனியை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் ஜேசிபி ஆப்ரேட்டர் ராம்குமார் (26). இவர்கள் இருவரும் கடந்த 15 ஆம் தேதியன்று இரவு 1 மணியளவில், அலங்கியம் ரோடு ரவுண்டானா பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சந்திரசேகர் (25) இரவு நேரத்தில் ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜெயேந்திரன், ராம்குமார் ஆகியோர் அவரை தரக்குறைவாக பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சந்திரசேகர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படை ஜெயேந்திரன் மற்றும் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து ஞாயிறன்று (ஏப்.21) காலையில் இருவரையும் காவல் ஆய்வாளர் ராஜாகண்ணன் கைது செய்து விசாரணை நடத்தி வந்தார். இதையறிந்த அதிமுக நகர செயலாளர் காமராஜ், பாமக மாநில துணைப் பொது செயலாளர் ரவி உள்ளிட்டோர் காவல்நிலையத்திற்கு வந்தனர். அங்கு இருந்த காவல் ஆய்வாளரிடம் கைது செய்த இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆய்வாளர் இருவரையும் விடுவிக்க முடியாது என கூறி உள்ளார். இதையடுத்து அதிமுக நகர செயலாளர் காமராஜ் காவல் ஆய்வாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இது நல்லா இல்லை எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. பார்த்து நடந்துக்குங்க, உங்களிடம் எஸ்பி பேசுவார் என்றும் பேசிக்கொண்டிருந்த காமராஜ் திடீரென ஆவேசமாகி காவல் ஆய்வாளரை பார்த்து ‘நீ இந்த ஊரில் குடியிருக்க முடியாது. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று மிரட்டினார். மிரட்டலுக்கு பணியாத ஆய்வாளர் பரவாயில்லை. என் கடமையை நான் செய்வேன் என்று அமைதியாக பதில் கூறி உள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த நகர செயலாளர் காவல் ஆய்வாளரை மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக நகர செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.