tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

மதிப்பெண் குறைந்ததாக ஏமாற்றம் 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை

திருப்பூர், ஏப். 30 -திருப்பூரில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தும் கூட, மதிப்பெண் குறைந்துவிட்டதாக ஏமாற்றம் அடைந்த மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.திருப்பூர் இடுவம்பாளையம் பெருமாள் கோவில் வீதியின் பின்புறம் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். பனியன் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் சிவசுப்பிரமணியம் (15) இவர் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதி இருந்தார். திங்களன்று 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிவசுப்பிரமணியம் 247 மதிப்பெண்களுடன் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். எனினும் மதிப்பெண் குறைந்துவிட்டதாக ஏமாற்றத்துடன் தனது பெற்றோர், நண்பர்களிடம் சிவசுப்பிரமணியம் புலம்பியதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் திங்களன்று இரவு வீட்டுக்குள் தூங்கச் சென்றவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வீரபாண்டி காவல் நிலையத்தார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்தும் கூட மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர் மற்றும் அப்பகுதி யினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


9வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

திருப்பூர், ஏப். 30 -திருப்பூர் மாவட்டத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பளித்தது.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மைவாடி பெருமாள் கோவில் 2ஆவது வீதியைச் சேர்ந்தவர் பி.முருகசாமி (43).  இந்நிலையில் 4ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி கடந்தாண்டு அக்டோபர் 8ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றபோது, முருகசாமி திடீரென சிறுமியின் வாயைப் பொத்தி அவரது வீட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.இதையறிந்த சிறுமியின் பெற்றோர் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டப் பிரிவின் (போக்ஸோ) கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவலர்கள் முருகசாமியைக் கைது செய்தனர். இவ்வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் வி.பரிமளா ஆஜரானார். இவ்வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி ஜெயந்தி தனது தீர்ப்பில், குற்றம் சுமத்தப்பட்ட முருகசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.