தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக திருப்பூரில் அமைந்துள்ள நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சியில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது நஞ்சராயன் குளம். இங்கு ஆண்டுதோறும் 181 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இதில் 45 வகை வலசை பறவைகளும் அடக்கம். மேலும் இங்கு 76 வகையான தாவரங்களும் 11 வகையான பாலூட்டிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இக்குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்றி பராமரிக்க வேண்டும் என நீண்ட காலமாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசு நஞ்சராயன் குளத்தை தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் வனத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டமன்றத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு ரூ.7.5 கோடி செலவில் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.