tamilnadu

img

ராஜா முத்தையா கல்லூரிக்கு அரசு கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய் எங்கே?: மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கேள்வி....

சிதம்பரம்:
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி  மாணவர்கள் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி  49 ஆவது நாளாக  வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர் உணவு என அனைத்தையும் தடை செய்தது.  இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்படவில்லை.மாணவர்கள் போராட்ட களத்திலேயே இரவு பகல் என தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வெளியில் ஏற்பாடு செய்யும் உணவுகளை போராட்ட களத்தில் அருந்தி தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்களுக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

முறையாக கணக்கு இல்லை
இந்நிலையில் போராட்ட களத்தில் உள்ள மாணவர்கள் அரசிதழை ஆதாரமாக கொண்டு கடந்த 2014 ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை ரூ.2075 கோடியை தமிழக அரசு இந்த பல் கலைக்கழகத்திற்கு அளித்துள்ளது. நடப்பு கல்வியாண்டிற்கு மட்டும் 2019-20 கல்வி ஆண்டில் மட்டும் ரூ.1044 கோடி கொடுத்துள்ளது.  இதற்கான கணக்குகள் இல்லை. மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவில் இது அரசு கல்லூரி என்று தான் அனுமதிவாங்கியுள்ளனர். இதை சுயநிதி கல்லூரிஎன்று அனுமதி வாங்கவில்லை. இதற்கான ஆதார கடிதம் அரசிதழில் உள்ளது.இவர்களாகவே இது சுயநிதி கல்லூரி என்று பொதுமக்கள் உள்ளிட்ட ஏழை மாணவர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.

எங்கே போகிறது பணம்?
அப்படியே சுயநிதிக் கல்லூரி என்றால் அரசு ஏன் இவ்வளவு பணம் ஒதுக்கவேண்டும். இவ்வளவு பணம் ஒதுக்கியும் ஏழை பொதுமக்கள் மருத்துவம் பார்க்க மருத்துவமனைக்கு வரும் போது அவர்களிடம் பல ஆயிரம் ரூபாய் வாங்கப்படுகிறது. இந்தப் பணம் எல்லாம் எங்கே போகிறது என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். யாரோ ஒருவர் செய்த தவறுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலிகடாவா? என்று கேட்கின்றனர்.முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் மன நிலையை தத்துருவமாக வீதி நாடக வடிவில் நடத்திக்காட்டினர்.