சென்னை:
சிறந்த இதழியருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமது துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர், “முன்களப் பணியாளர்கள் என்று அறிவிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நிவாரண 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த நிதி இன்னும் பலருக்கு வழங்க வேண்டியுள்ளது. அதற்கான பட்டியலிலும் தயாராகிவிட்டது. விரைவில் வழங்கப்படும்” என்றார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிடுகையில், “உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளிக்கும் வகையில் “பத்திரிகையாளர்கள் நல வாரியம்”, பணிக்காலத் தில் மரணமடையும் பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவிநிதி ரூபாய் 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வங்கப்படும்” என்றார்.பத்திரிகையாளர்கள் தங்களின் துறை சார்ந்த தொழிற் தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கும் திறன்மேம்பாட்டை அதிகரித்துக்கொள்ளவும் மொழித் திறன் மற்றும் நவீனத் தொழில் நுட்பத்தில் சிறந்த விளங்கவும் மாவட்ட, மாநில அளவில் பத்திரிகையாளர்ககுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். இளம் பத்திரிகையாளர்கள் இந்திய அளவில் புகழ்மிக்க இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் போன்ற பத்திரிகை சார்ந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி படிக்கவும், பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்படும்.இதழியியல் துறையில் சமூக மேம்பாட் டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் “கலைஞர் எழுதுகோல் விருது” மற்றும் ஐந்து லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.