சட்டமன்ற உறுப்பினரை பாகுபாட்டுடன் நடத்திய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை வருமாறு:
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர், வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா 07.07.2025 அன்று நடைபெற்றது. திருப்பெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை விழாவில் பங்கேற்க வந்துள்ளார். ஆனால், அங்கு பணியில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவரை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர். ஆகம விதிகள் என்ற பெயரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரையே அவமரியாதையாக நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதே நிகழ்வில் பங்கேற்ற வேறு சில கட்சிகளின் தலைவர்களுக்கு அனைத்து விதமான மரியாதைகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான திரு கு. செல்வப்பெருந்தகை அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது ஏன் என்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் முன் பதில் அளித்திட வேண்டும்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் உடனடியாக உரிய விசாரணைகள் நடத்தி இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.