tamilnadu

img

திருமண நிதியுதவி, லேப்டாப் மானியத்தை கணிசமாக வெட்டியது அதிமுக அரசு

சென்னை:
இலவசத் திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கான மானியத்தை கடந்த சில ஆண்டுகளாக அதிமுக அரசு கணிசமாகக் குறைத்து வருவது  இந்திய தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது. 
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசிநாளான கடந்த சனிக்கிழமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த மாநில நிதி நிலை மீதான தணிக்கை அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 
2016-17 ஆம் ஆண்டு ரூ.16 ஆயிரத்து 92 கோடியாக இருந்த மானியத்தொகை 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.15 ஆயிரத்து 230 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் மொத்த வருவாயில் மானியங்கள் 10.41 விழுக்காட்டைக் கொண்டுள்ளது. மானியங்களுக்கான நிதி ஒதுக்கீடு 2013-14 ஆம் நிதியாண்டு ரூ.9,646 கோடியாக இருந்தது. இது 2016-17 ஆம் நிதியாண்டில் இது ரூ.16ஆயிரத்து 92 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2017-18 ஆம் நிதியாண்டில் இது ரூ.15ஆயிரத்து 230 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைக்கான மானியம் மட்டும் ரூ.1693 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப்பெண்கள்
திருமண உதவி, கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித்தொகை, லேப்டாப் மற்றும் சீருடை விநியோகம் ஆகியவற்றுக்கான மானியம் 2015-16ஆம் நிதியாண்டில் ரூ.6,156 கோடியாக இருந்தது. இது 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.4433 கோடியாகச் சுருக்கப்பட்டுள்ளது. இலவச கிரைண்டர், மிக்சி கொள்முதல் செய்ய 2016-17ஆம் ஆண்டு 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.இத்திட்டத்திற்கு 2017-18 ஆம் நிதியாண்டில் ஒரு பைசா கூட ஒதுக்கப்பட வில்லை.

லேப்டாப் கொள்முதல் குறைப்பு 
மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லேப்டாப் கொள்முதல் செய்ய2015-16 ஆம் நிதியாண்டில் 1100 கோடி ஒதுக்கப்பட்டது.2017-18 ஆம் நிதியாண்டுக்கு  இந்த தொகை ரூ.641 கோடியாக 
வெட்டப்பட்டுவிட்டது. இதனால் தான் பல பகுதிகளில் லேப்டாப் விநியோகம் செய்யாமல் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களை ஏமாற்றி வருகிறது. மாணவர்கள் சாலையில் இறங்கிப் போராடி வருகிறார்கள். பல பள்ளிகளில் மேல் நிலைப்பள்ளி முடித்து கல்லூரிக்கும் மாணவர்கள் சென்று விட்டனர். இன்னும் அவர்களுக்கான லேப்டாப் வழங்கப்படவில்லை.

வளர்ச்சி விகிதம் குறைவு 
கடந்த நிதியாண்டின் மார்ச் மாத நிலவரப்படி மாநில அரசுக்கு நிலுவையில் உள்ள மொத்த கடன் தொகை ரூ.91 ஆயிரத்து 852 கோடியாகும். இதனால் மாநில அரசின் நிதிநிலை வருங்காலத்தில் மேலும் மோசமாகக்கூடும் என்று தலைமை கணக்காயர் எச்சரித்துள்ளார். மாநில அரசின் மொத்த வருவாய் வரவினங்கள் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 280 கோடியாகும். 2017-18 ஆம் நிதியாண்டின் கணக்குப்படி ஆண்டு வளர்ச்சி விகிதம் 4.31 விழுக்காடாக உள்ளது. இது இதேபோன்று வருவாய் உள்ள மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். 

134 திட்டங்கள் தாமதம்
134 திட்டங்களைக் காலத்திற்குள் நிறைவேற்றாத காரணத்தால் அதன் பலன் சமூகத்தில் உள்ள மக்களுக்கு மிகவும் தாமதமாகச் சென்றதாகவும் தலைமை கணக்காயர் தனது தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தாமதமாகத் திட்டங்களை நிறைவேற்றியதால் திட்டச்செலவு அதிகரித்து மாநில அரசுக்கு வீண் செலவானதாகவும் அறிக்கை விவரிக்கிறது.

அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறை
மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.21 ஆயிரத்து 594கோடியாக இருந்தது. இது 2013-14ஆம் நிதியாண்டிலிருந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு நிதிபொறுப்புடைமை சட்டத்தின் படி 2019-20ஆம் நிதியாண்டுக்குள் வருவாய் பற்றாக்குறையை முற்றிலுமாக  ஒழிக்கவேண்டும் என்ற இலக்கை எட்டமுடியாது என்றும் அறிக்கை கோடிட்டுக்காட்டியுள்ளது.

தொகுப்பு: அ.விஜயகுமார், சி. ஸ்ரீராமுலு