tamilnadu

img

மானியம் வெட்டு ; உள்ளாட்சி நிதி ‘கட்’ வந்த பணத்தையும் திருப்பி அனுப்பிய அவலம்...

சென்னை:
நிலப்பரப்பில் 1,30,058 சதுர கிலோ மீட்டர் கொண்ட தமிழ்நாடு மாநிலம் நாட்டில் 16வது பெரிய மாநிலமாகும். மக்கள் தொகையில் (7.21 கோடி) ஏழாவது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலையில் நமது மாநிலம் ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்து 518 கோடி கடனில் தத்தளித்து வருவதால் ஒவ்வொருதமிழரின் தலையிலும் (பிறக்கும் குழந்தை உட்பட) சுமார் 46 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர் எனக் கணக்கிடலாம். இப்படி ஒரு கணக்கை இந்திய தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் ஆண்டறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது. ஏழை - எளிய மக்களுக்கு அளிக்கும் மானியங்களையும் செலவினங்களையும் கடன் என்று கணக்கில் ஏற்றி தமிழக அதிமுக அரசு மாய்மாலம் செய்திருக்கிறது என்பது, இந்த அறிக்கையின் விபரங்களிலிருந்து தெரிய வருகிறது.

நடப்பு தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளன்று இந்திய தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் ராஜீவ் மெஹரிஷி, தமிழ்நாடு புதுச்சேரி முதன்மை கணக்காய்வுத் தலைவர் தேவிகா நாயர் ஆகியோர் தலைமையிலான குழு இறுதி செய்த மாநில நிதி நிலை மீதான மார்ச் 2018 ஆம் ஆண்டுடன் முடிந்த 152 பக்கங்களைக் கொண்ட ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.கடந்த 2001ஆம் ஆண்டு 6.24 கோடியாக இருந்த தமிழக மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி 7.21 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 15.54 விழுக்காடு வளர்ந்திருக்கிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் விழுக்காடு அனைத்திந்திய சராசரியைக் காட்டிலும் குறைவாகவே (11.3 விழுக்காடு) இருக்கிறது. மாநிலத்தின் மனிதவள மேம்பாட்டு குறியீடு தேசிய அளவை விட 7.47 அதிகரித்து வருகிறது எனவும் 2017-18 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 14,27,074 கோடி என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உள்ளாட்சிக்கு நிதி ‘கட்’
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 நகர்ப்புற ஊராட்சிகள் (பேரூராட்சி) என 664 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும், 31 மாவட்ட ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 கிராம ஊராட்சிகள் என்று 12 ஆயிரத்து 940 ஊராட்சி அமைப்புகளும் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநிலத்தின் நிகர சொந்த வரி வருவாயில் 10 விழுக்காடு 56:44 என்ற விகிதத்தில் வழங்க வேண்டும் என்ற 5வது மாநில நிதிக்குழு பரிந்துரையை தமிழ்நாடு அரசும் ஏற்றுக்கொண்டது. ஆனால், மாநில நிதிக்குழு மானியமாக ரூ.4,269 வழங்க வேண்டிய தமிழக அரசு ரூ‌.3,796 கோடி மட்டுமே 2017-18 ஆம் ஆண்டில் விடுவித்திருக்கிறது.வருவாய் செலவினங்களில் உள்ளாட்சி அமைப்பு களுக்கு  2016-18 ஆண்டுகளில் ரூ.11,216 கோடி ஒதுக்கப்
பட்ட நிலையில் 2017-18 ஆம் ஆண்டுகளில்  8 ஆயிரத்து 911 கோடியாக குறைத்திருக்கிறது மாநில அரசு.இத்தகைய பின்னணியில், நிதி இல்லாமல் மின்சாரக் கட்டணம் கூட  கட்ட முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திண்டாடி வருவதையும், தாண்டவமாடும் குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முடியாமல் இருப்பதையும் தமிழக மக்கள் அனுபவித்து வருகிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் உள்ளதால் 14- வது நிதிக்குழு ஆணைய பரிந்துரைகளின்படி மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்பு களுக்கான அடிப்படை மானியம் பெற முடியாமல் போனதை இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவரின் இந்த அறிக்கை வெட்டவெளிச்சமாக்கி, ‘எல்லாம் வந்து கொண்டுதான் இருக்கிறது’ என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு ஏகடியமாக பதில் கூறிய தமிழக அரசை சந்தியில் நிறுத்தியிருக்கிறது. 

செலவிடாத ரூ.5,869 கோடி!
மற்றுமொரு அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டிருக்கிறது கணக்கு தணிக்கை ஆணையம். காவிரி டெல்டா பகுதியில்தட்பவெப்ப நிலை மாறுதலால் ஏற்படும் தாக்குதலில் இருந்துவிடுபடுவது, நவீன பாசன  வேளாண்மை,   நீர்ப்பாசனகட்டமைப்புகளை புதுப்பித்தல், நீர்வள மேலாண்மைக்குழு,குடிமராமத்து, மறு சீரமைப்பு பணிகள், அணைகள்புனரமைத்தல் பணிக்காக மத்திய அரசு தனது வரவு-செலவு திட்டத்தில் அறிவித்து நிதி ஒதுக்கியும் மூன்று திட்டங்களை நிறைவேற்றாமல் ரூ.1,729 கோடி முழுத்  தொகையையும் தமிழக அரசு திருப்பி  அனுப்பியுள்ளது. மீதமுள்ள ஒரு பணிக்கான தொகையில் 76 விழுக்காடு  செலவிடப்படவில்லை.இது மட்டுமல்லாது,  கடலோர பேரிடர் துயர் தணிப்பு திட்டத்தின் மூலமாக, புயலால் பாதிக்கப்படாத மின் இணைப்பு அமைத்தல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியும் பயன்படுத்தப்படும் ரூ‌.1,493 கோடியை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.அனைவருக்கும் கல்வி திட்டம்,இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டம் போன்றவற்றை  நடைமுறைப்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ.1,627 கோடியையும்  பயன்படுத்தாமல் திருப்பிஅனுப்பி வைத்துள்ளனர். நிலங்களைக் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், ஒப்பந்தப் புள்ளிகள் முடிக்கப்படாததன் காரணமாக நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறையில் ரூ.1,022 கோடியை திரும்ப கொடுத்திருப்பதையும் 2012 ஆம் ஆண்டு முதல்17ஆம் ஆண்டு வரைக்கும் பல்வேறு அமைப்புகளில் அதிகப்படி யாக செலவிடப்பட்ட (மிகை) ரூ.1,099,58 கோடி தொகையை சட்டமன்றம் முறைப்படுத்தவில்லை என்பது உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளையும் விரிவாக அலசுகிறது இந்த அறிக்கை.