சென்னை:
தமிழக காவல்துறையில் உளவுத்துறை டிஜிபி உள்பட பல பதவிகளை வகித்து கடைசியாக தீயணைப்புத்துறை இயக்குனராக பொறுப்பேற்ற ஜாபர்சேட் வெள்ளிக் கிழமை பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.
இதையொட்டி நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் அவர் பேசும்போது 35 ஆண்டுகள் மனநிறைவுடன் பணியாற்றி விடைபெறுகிறேன். சட்டம்-ஒழுங்கு, ஆயுதப்படை, பாதுகாப்புத்துறை, பயிற்சி பிரிவு, சி.பி.சி.ஐ.டி. பிரிவு, தற்போது தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் பணிபுரிந்துள்ளேன். என்னை விழுதாய் தாங்கி பிடித்த காவல்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். குறிப்பாக 5 ஆண்டுகாலம் நான் மண்டபத்தில் இருந்தபோது என்னை தாயாய் தாங்கிபிடித்தோருக்கும் நன்றி. இவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை என்றார் அவர்.
காவல்துறையில் நாம் 50 சதவீத அதிருப்தியுடன் தான் பணிபுரிகிறோம். எல்லா பிரச்சனைகளிலும் காவல் துறையினர் தான் முன்னணியில் நின்று பணியாற்றுகிறார்கள். ஆனால் பிரச்சனை முடிந்தபிறகு காவல்துறையினரை யாரும் நினைத்து பார்ப்பதில்லை.நான் பல உயர்வுகளையும் பார்த்துள் ளேன். வீழ்ச்சிகளையும் சந்தித்துள்ளேன். வீழ்வது தோல்வி ஆகிவிடாது. எத்தனை சவால்களை எதிர்கொண்டபோதும் நெஞ்சுணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.விழாவில் ஜாபர்சேட்டுக்கு நினைவுபரிசை டி.ஜி.பி. திரிபாதி வழங்கினார். நிகழ்ச்சியில் காவல்துறை உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.