தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட 6சவரன் வரையிலான நடைக்கடன் ரத்து செய்யப்படுவதோடு மகளிர் சுய உதவி குழு கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 5ந்தேதி அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக சட்டமன்ற தேர்தலை கவனத்தில்கொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, கூட்டுறவு வங்கியில் விதி 110-ன் கீழ் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய 23ந்தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடியது. அதைத் தொடர்ந்து 24, 26, 27ந்தேதி வரை பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரின்போது, பல்வேறு அறிவிப்புகளை விதி 110ன் கீழ் வெளியிட்ட முதல்வர், இன்று கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன்களும் ரத்து செய்யப்படும் என அறிவித்து உள்ளார்.