உண்மை, நேர்மை, எளிமை, கடின உழைப்பு, தொண்டு, தியாகம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் தான் தோழர் என்.சங்கரய்யா.
தேச விடுதலைப் போராட்டத்திலும், இந்தி எதிர்ப்புப் போரிலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை விடியலுக்கும் தம் வாழ்க்கையை கருக்கிக் கொண்ட விடிவெள்ளி! பாட்டாளி வர்க்கத்தின் விடியலுக்கு புதிய பூபாளம் இசைத்தவர். சிறை
வாழ்க்கையைத் தவ வாழ்க்கையாக வாழ்ந்தவர்!
தோழர் சங்கரய்யாவோடு பல பொது மேடைகளில் நாம் கலந்து கொண்டுள்ளோம். 1997ஆம் ஆண்டுநடைபெற்ற தென் மாவட்ட சாதிக்கலவரத்தின்போது தென் மாவட்டங்களுக்குச் சென்று அமைதிப்பணிகளும் நிவாரணப் பணிகளும் ஆற்றினோம். சாதிக் கலவரப் பகுதிகளில்மக்கள் தந்த கோரிக்கைகளை குறிப்பாக தீப்பிடிக்காத மேற்கூரை வீடுகள் பற்றி அப்போதைய மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்து அளித்தோம். மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றினார்.
ஒத்த கருத்து
அதற்குப் பிறகு சில நாட்கள் கழித்து மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு மாநாட்டிலும் கலந்து கொண்டு உரையாற்றினோம். பல அரசியல்கட்சித் தலைவர்களும் சமயத் தலைவர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். நமது தோழர் சங்கரய்யா அவர் களும் அம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மாநாட்டில் தோழர் சங்கரய்யாவின் கருத்தும், நமது கருத்தும் ஒத்திருந்தன.தென் மாவட்ட சாதிக் கலவரங்களுக்குத் தீர்வு காண மக்கள் சாதி வேறுபாடின்றி கலந்து வாழும் சூழலை உருவாக்கவேண்டும். வேலையின்மையும் கலவரப் பிரச்சனைகளுக்கு ஒரு காரணம் என்ற கருத்தையும் பதிவு செய்தோம். அதன் விளைவாகத் தான் சமத்துவபுரங்கள் அமைக்கும் திட்டம் உருவானது. பின் தங்கிய தென் மாவட்டத்தொழில் மேம்பாட்டிற்கு உச்சநீதிமன்ற மேனாள் நீதி அரசர் தலைமையில் தொழில் மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டது.தோழர் சங்கரய்யா அவர்கள் தம் வாழ்வில் 100ஆவது ஆண்டைத் தொடங்க இருக்கின்றார். ஒருநூற்றாண்டு மனிதராய் சாதனைப்படைத்திருக்கின்றார். அவர் வாழ்ந்தவாழ்வு தனி மனித வாழ்க்கை அல்ல!உண்டு, உறங்கிக் களித்த சுகபோகவாழ்க்கை அல்ல! மனித குலத்தின்விடியலுக்கும் மேம்பாட்டிற்கும் உழைத்து உழைத்து உருக் குலைந்து தம்மை அர்ப்பணித்த அப்பழுக்கற்ற வாழ்க்கை.
முன் மாதிரியாய் திகழட்டும்
“இம் என்றால் சிறைவாசம் ஏன்என்றால் வனவாசம்” என்று வாழ்ந்தவாழ்க்கை. “ஏறினால் ரயில்! இறங்கினால் ஜெயில்!” என்று வாழ்ந்த போராட்ட வாழ்க்கை.“காலுக்குச் செருப்புமில்லை! கால்வயிற்றுக் கூழுமில்லை! பாழுக்குழைத்தோமடா என்தோழனே பசையற்று போனோமடா! ” என்று உழைத்து உழைத்து ஓடாய்ப்போன தியாக வாழ்வு தோழர் சங்கரய்யா அவர்களின் வாழ்வு! “செங்கொடி என்றதுமே எனக்கோர் ஜீவன் பிறக்குதம்மா” “புகழ்வளர் இந்திய நாடே பிறிதொன்று எமக்கில்லை ஈடே! ” என்றுபொது உடைமை கொள்கையும், இந்தியத் தேசப்பற்றும் ஒருங்கே கொண்டு வாழ்ந்தவர்! விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே தோழா! என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர்!
கல்லூரிப் பருவத்தில் பொதுவுடைமை போராளியாகத் தம் பொதுவாழ்க்கைப் பயணத்தைத் தொடங் கிய தோழர் சங்கரய்யா ஒரு நூறாண்டைக் கடந்து பயணிக்கும் பொழுதும் வீறுநடைபோட்டு வருகின்றார்.தோழர் சங்கரய்யா அவர்களின் வாழ்க்கை இளைஞர்களுக்கு முன் மாதிரியாக விளங்கட்டும். தோழர் சங்கரய்யா அவர்களின் புகழ் ஓங்கட்டும்! அவர் பாதையில் இளைய தலைமுறைகளின் தொண்டு தொடரட்டும்.