tamilnadu

img

குன்றக்குடி மக்களுக்கு நிவாரணம்: பொன்னம்பல அடிகளார் வழங்கினார்

சிவகங்கை,மே 1- கொரோனா நோய் பரவல் தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை குன்றக்குடி ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்.   கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் கபசுரக் குடிநீர் விநியோகிக்கும் பணிகள் குன்றக்குடி ஆதீனத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.குன்றக்குடி ஆதீன மடத்தில் தினமும் 100 பேருக்கு மதிய உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்கட்டமாக பிரதமர் நிவாரண நிதிக்கும், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரனிடம் பொன்னம்பல அடிகளார் வழங்கினார். குன்றக்குடி கிராமத்தில் பணியாற்றும் 20 தூய்மைப் பணியாளர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணத் தொகையும் தலா 10 கிலோ அரிசியும் வழங்கினார்.

குன்றக்குடி கிராமத்தைச் சேர்ந்த குடும்ப அட்டை தாரர்களுக்கும், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கும் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. . இதுவரை 1,200 பேருக்கு சுமார் 7 லட்ச ரூபாய் செலவிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் குன்றக்குடி மக்களுக்கு மேலும் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் பொன்னம்பல அடிகளார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.