திருவள்ளூர், செப் 8- கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் சீல் வைக்கப்பட்ட எட்டியம்மன் கோயிலை திறந்து பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை நிலைநாட்ட உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ளது வழுதலம்பேடு. இங்குள்ள எட்டியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு செய்யும், உரிமை தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள், கடந்த மாதம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரை சந்தித்தனர். அப்போது, கோவில் திருவிழா குழுவில் தங்களையும் இணைத்து விழாவுக்கான ஏற்பாட்டை செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அமைதிப் பேச்சு இதையடுத்து, இரு தரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சு நடத்திய அதிகாரிகள், பட்டியலின மக்களின் காணிக்கை, பூசை பொருட்கள் கோயில் பூசாரி பெற்றுக் கொள்ள வேண்டும். 48 நாள் மண்டல பூசையில் பட்டியலின பகுதிக்கு ஒரு நாள் ஒதுக்க வேண்டும். ஒப்பந்தம் எட்டியம்மன் கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதால் திருவிழா தொடர்பான அனைத்து முடிவுகளையும் அறநிலைய துறையின் ஒப்புதல் பெற்று முறையாக நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முடிவை, இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். அவமதிப்பு இதைத் தொடர்ந்து, ஆக. 9 அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. ஒரு தரப்பு மக்கள் வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து, பட்டியலின மக்களை 11 மணிக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது மற்றொரு பிரிவினர் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். அமைதிப் பேச்சு நடந்துபோது, ஒப்பு கொண்டவர்களே அந்த முடிவுக்கு மாறாக நடந்து கொண்டனர். 7 பேர் மீது வழக்கு கோவிலுக்கு செல்லும் பாதை பட்டா நிலத்தில் உள்ளது. எனவே. பட்டியலின மக்கள் இந்த பாதை வழியாக கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று தடுத்தனர். பின்னர் பிறகு, அரசுக்கு சொந்தமான ஓடை கால்வாய் வழியாக மாற்றுப்பாதையில் சென்ற போதும் பட்டியலின மக்களை தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து எழுந்த பிரச்சனையால், கோயிலை இழுத்து மூடி வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இந்த சம்பவத்தின்போது, வழிமறித்த 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தலையீடு இந்த சூழலில், ஆக. 16 அன்று திருவள்ளூர் ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் சிபிஎம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர்,விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தலைவர்களிடம் தெரிவித்தார்.
சிறப்புக்கூட்டம்
வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமையன்று (செப். 7), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் இ.எழிலரசன் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தீஒமு மாநில சிறப்பு தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.கே.மகேந்திரன், மாநில பொருளாளர் இ.மோகனா, மாவட்டச் செயலாளர் த.கன்னியப்பன், பொருளாளர் எம்.சிவக்குமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரிய பிரகாஷ், விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், விதொச மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா, வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப.லோகநாதன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் டி.கோபாலகிருஷ்ணன், வி.குப்பன், வி.ஜோசப், எம்.சி.சீனு ஆகியோர் பங்கேற்றனர். பெ.சண்முகம்-எஸ்.கே.மகேந்திரன் பங்கேற்பு வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்கும் வகையில் வரும் செப் 20 அன்று கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன் ஆகியோர் தலைமையில் வழுதலம்பட்டு பட்டியலின மக்கள் எட்டியம்மன் ஆலய நுழைவு போராட்டம் நடத்துவது என்று சிறப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் சிபிஎம் , தீஒமு உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்தோர் திரளானோர் கலந்து கொள்வார்கள் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.