சென்னை:
பள்ளிக் கல்வித் துறையும் அரசும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் 17 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அதன் பொதுச் செயலாளர் அ.சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் தலைமையில் சங்க நிர்வாகிகள் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமாரை சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் 2004ஆம் ஆண்டில் இருந்து பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் நியமனம் கிடையாது. இதுவரை பள்ளிக்கல்வித் துறையில் அரசுப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவும் இல்லை. அவ் வேலையில் அரசுப் பள்ளியில் சுமார் 5000 ஆசிரியர்களும் அரசு உதவி பெறும் பள்ளியில் சுமார் 6000 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற அரசு கொள்கை முடிவின்படி 2004ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஆட்சி செய்த அரசு இக்கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் அவல நிலையைப் போக்க முன்வரவேண்டும்.அனைத்து இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களையும் தரம் உயர்த்தி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க அரசின் கொள்கை முடிவெடுத்து அரசாணை பிறப்பித்து அநீதியை களைய வேண்டும் என்று வலியுறுத்தினர்.