தமிழ்நாடு எஸ்.சி/எஸ்.டி ஆணையத் தலைவர் எஸ்.தமிழ்வாணன் மறைவுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:
"தமிழ்நாடு எஸ்.சி/எஸ்.டி ஆணையத் தலைவர் எஸ்.தமிழ்வாணன் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்வாணன் 2005 முதல் 2016 வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியவர். பின்னர் 2021-இல் மாநில எஸ்.சி/எஸ்.டி ஆணையத் தலைவராக பொறுப்பேற்றார். ஆணையத் தலைவராக பொறுப்பேற்றவுடன் கல்வி, வேலை, நில உரிமை போன்றவற்றில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியின மக்களின் முன்னேற்றம் குறித்து தமிழக அரசுக்கு பல பரிந்துரைகளை முன் வைத்தார்.
குறிப்பாக ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளை ஆய்வு செய்து அங்குள்ள குறைபாடுகளை சரிசெய்ய தமிழக அரசுக்கு ஆணையத்தின் சார்பாக பரிந்துரைகளை முன்வைத்தார். பட்டியல் சமூக மக்களிடமிருந்து வரும் புகார் மனுக்களை உடனுக்குடன் விசாரிப்பது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி முழுமையான விசாரிணையை நடத்தும் வழக்கத்தை நடைமுறையாக்கினார். வன்கொடுமை குற்றங்கள் நடைபெறும் போது நேரடியாக களத்திற்கு சென்று விசாரணையை நடத்தியவர். குறிப்பாக சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் வீட்டிற்கு நேரிடியாக சென்று உரிய சட்டத் தலையீடுகளுக்கும், நிவாரணத்திற்கும் பரிந்துரைத்தார். இவரது பொறுப்பு காலத்தில் எஸ்.சி/எஸ்.டி ஆணையம் உறுப்பினர்களும் களத்திற்குச் சென்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கடமைகளை செய்யத் தவறிய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி அவர்கள் மீதான குற்றத்தை விசாரித்துள்ளார். சாதி ஆணவ படுகொலைகளைத் தடுப்பதற்கு தனி சட்டம் வேண்டும் என்பதை தமிழக அரசுக்கு பரிந்துரைத்தவர். தென்மாவட்டங்களில் அதிக அளவிலான சாதிய வன்கொடுமைகள் நடப்பதையும் அதில் தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பல்வேறு புகார் மனுக்களை அனுப்பும் போது அதில் உரிய கவனம் செலுத்தி விசாரணையை நடத்துவதோடு மட்டுமல்லாமல் உரிய பதிலையும் அனுப்பியுள்ளார். இவரது இழப்பு சமூக நீதி இயக்கங்களுக்கு பெரும் இழப்பாகும். இவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
