மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவையை தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.289 கோடி செலவில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
அதேபோல், திருச்சி பஞ்சப்பூர் என்ற இடத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில், 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடி செலவில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.