சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனுக்கு செவ்வாயன்று (ஆக.17) 59ஆவது பிறந்த நாளாகும். இதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், “திராவிடச் சிறுத்தை திருமாவளவனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.59ஆவது பிறந்த நாளையொட்டி தொல். திருமாவளவனை செல்பேசியில் தொடர்பு கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். அரசியல் மற்றும் சமூகப் பணியை தொடர்ந்து சிறப்புடன் ஆற்றிட வேண்டுமெனவும் அவர் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கொரோன வைரஸ் தொற்று பரவல் காரணமாக தனது பிறந்த நாள் விழாவை திருமாவளவன் மிக எளிமையாக கொண்டாடினார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை பெரியார் திடலில் நடந்த வாழ்த்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், வக்பு வாரியத் தலைவர் அப்துல்ரகுமான்,பத்திரிகையாளர்கள் ஜென்ராம், இந்து ராதாகிருஷ்ணன், கவிதா முரளிதரன், ஜீவசகாப்தன் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விசிக தலைவர்கள் ரவிக்குமார், சிந்தனைசெல்வன், வன்னியரசு, எழில்கரோலின், எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.