கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு தமிழக அரசு ஊக்கம் அளித்திட வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதில் சென்னை கண்ணகி நகரைச் சார்ந்த மாணவி கார்த்திகா துணை கேப்டனாக செயல்பட்டு, அபாரமான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். ஆட்டோ ஓட்டுனரான தாயாரின் மகளான கார்த்திகா தனது கடும் உழைப்பினால் உயரத்திற்கு சென்றுள்ளார் என்பது மிகவும் பாராட்டுக்குறிய சாதனையாகும்.
ஒடுக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்த கார்த்திகா உலக அரங்கில் சாதித்து காட்டியிருப்பது சாதி - பாலினத் தடைகளைத் தாண்டிய வரலாற்றுத் தடமாகும்.
பஹ்ரைனில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் ஹரியானாவைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு அந்த மாநில அரசு தலா ரூ. 3 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. தமிழக அரசு ரூ.25 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது. இதுவரை பல்வேறு விளையாட்டுகளில் சாதித்தவர்களுக்கு வழங்கப்பட்டது போல் மாநில அரசு வீராங்கனை கார்த்திகாவுக்கும் பரிசுத்தொகை, அரசு வீடு ஆகியவற்றை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
மேலும், கண்ணகி நகர் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பெண்கள் கபடி பயிற்சி மையம் மற்றும் விளையாட்டுத் தளம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
