அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எஸ்.பி வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை
விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பது முறையில்லை. இந்த வழக்கை எதிர்மறையாகக் கருதக்கூடாது என இரு தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்தினருக்கு எதிராக அமைச்சர் வேலுமணி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை எதிர்மறையாக கருதக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோமே தவிர தடை விதிக்க வில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதில் தவறில்லை. அமைச்சர் வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அரசியல் நோக்குடன் தொடரப்பட்டுள்ளதாகக் கூறி அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், அமைச்சர் வேலுமணிக்கு 10 ரூபாய் அடையாள அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டபோது, உள்நோக்குடன் இந்த வழக்கைத் தொடரவில்லை என வேலுமணி தரப்பில் தெரிவித்ததை அடுத்து, அபராதத்தை மட்டும் நீக்கினர். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதாகவும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.