அறப்போர் இயக்கம் தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருவதால் ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று எஸ்.பி வேலுமணி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒப்பந்தங்களை தனக்கு வேண்டப்பட்டவா்களுக்கு ஒதுக்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சா் எஸ்.பி வேலுமணி மீது அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வந்தது.
தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூற அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அமைச்சா் வேலுமணி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தார். இதே போன்று ஒப்பந்த நிறுவனங்களும் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக வழக்குகளைத் தொடா்ந்தன.
இந்த வழக்கு இன்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூற அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்கக் கோரி அமைச்சா் வேலுமணி மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் தொடா்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.