tamilnadu

img

தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுத்திடுக... முதல்வருக்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளனம் மனு.....

சென்னை:
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் முடங்கிக்கிடந்த தூய்மைப் பணியாளர்நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளனம் மனு அனுப்பியுள்ளது.

சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவின் விபரம் வருமாறு:

கடந்த 2006ஆம் ஆண்டு தமிழக முதல்வராக டாக்டர் கலைஞர் இருந்தபோது தூய்மைப் பணியாளர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு தூய்மைப் பணியாளர் நலவாரியம் அமைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக அரசு இந்த வாரியத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டதால் இப்பிரிவு மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மனிதக்கழிவை மனிதன் எடுக்கும்நிலைக்கு முற்றுப்புள்ளிவைப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள் ளது. இது வரவேற்கத்தக்கதாகும். இதனை செயல்படுத்த வேண்டியது அவசியமாகும். தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் நிரந்தர தூய்மைப் பணியாளர்களும், சுமார் 1.50 லட்சம் ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி தூய்மைப்பணியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது பணியை செய்து வருகின்றனர்.

தூய்மைப் பணியில் உள்ளவர்களில் பெரும்பான்மையோர் பட்டியலின சாதி மற்றும் அருந்ததியினர் மற்றும் பழங்குடியின பகுதியினர் ஆவர். இவர்களது கல்வி, பொருளாதார சமூக முன்னேற்றம் குறித்து தூய்மைப் பணியாளர் வாரியத்தின் மூலம் ஆலோசனைகள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.எனவே, தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில்அமைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த தாங்கள்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.