tamilnadu

img

பா.ரஞ்சித்திற்கு எதிரான வழக்கை திரும்பப் பெற தமுஎகச வலியுறுத்தல்

சென்னை:
இயக்குநர் பா.ரஞ்சித்-க்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் மிரட்டல் மற்றும் அவதூறுக்கு தமுஎகச கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக தமுஎகச மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் சமீபத்தில் நடந்த நிகழ்வொன்றில் பங்கேற்ற திரைப்பட இயக்குனரும் சமூகச் செயற்பாட்டாளருமான  பா.ரஞ்சித், தலித்துகள் மீது கடந்த காலத்திலும் சமகாலத்திலும் அதிகரித்து வரும் சாதியக் கொடுமைகள், அவற்றுக்கெதிரான போராட்டம் ஆகியவை குறித்து பேசியுள்ளார். அவரது பேச்சின் உட்கிடக்கையை கணக்கில் கொள்ளாமல் அவர் ராஜராஜ சோழனை அவமதித்துவிட்டதாகவும் அதற்காக அவரை அழைத்து கண்டிக்கும்படியும் சிலர் சமூக ஊடகங்களில் அவரது அலைபேசி எண்ணை பரப்பியுள்ளனர். PrayForMentalPaRanjith என்கிற தலைப்பை சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்தவும் முயற்சித்துள்ளனர். பண்பீனமாக வரம்புமீறி இவ்விவாதத்திற்கு சற்றும் தொடர்பற்ற ரஞ்சித்தின் இணையர் மற்றும் அவர்களது மகளின் புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டு அவதூறு பரப்பினர்.  மாறுபட்ட கருத்து தெரிவிப்பவர்களை கருத்துரீதியாக எதிர்கொள்ளாமல் இவ்வாறான அச்சுறுத்தல் அவதூறுகளால் உளவியல் நெருக்கடிக்கு ஆளாக்கி பணிய வைக்கலாம் என்கிற சங் பரிவாரத்தினரின் ட்ரோல் ஒழுங்கீனம் தமிழகத்தில் பரவிவருவதன் அறிகுறியே இதுவென தமுஎகச கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. \

மேலும், இந்நிகழ்வில் ராஜராஜ சோழன் குறித்து ரஞ்சித் தெரிவித்த கருத்துகள் இருதரப்பு இணக்கத்தை குலைக்கும் விதமாக இருந்ததெனக் குற்றம்சாட்டி அவர் மீது திருப்பனந்தாள் காவல்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான அத்துமீறல் என்று தமுஎகச கருதுகிறது. ராஜராஜசோழன் பற்றி ரஞ்சித் தெரிவித்த கருத்துகள் கே.ஏ,நீலகண்ட சாஸ்திரி, நொபுரு கரோஷிமா, ஆ.சிவசுப்ரமணியம், ஏ.கே.காளிமுத்து போன்ற ஆய்வாளர்களால் ஏற்கனெவே முன்வைக்கப்பட்டதன் தொடர்ச்சியே ஆகும். இதே கருத்துகளை தந்தை பெரியார், கவிஞர் இன்குலாப் போன்றோர் வெளிப்படுத்தியுள்ளனர். 

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் காக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வழங்கிவரும் தீர்ப்புகளின்  ஆதாரத்தில் நின்று இவ்வழக்கை தமிழகஅரசு நிபந்தனையின்றி திரும்பப்பெற வேண்டும் என்று தமுஎகச கோருகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.