சென்னை:
உதவித் தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் இரண்டாம் கட்டமாக அரசு அலுவலகங்களில் குடியேறி காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தெலுங்கானா, புதுச்சேரிமாநிலங்களைப் போன்று தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாயும்,கடும் ஊனமுற்றோருக்கு 5 ஆயிரம் ரூபாயும் மாத உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி குறைந்தபட்சம் தனியார்துறை பணிகளில் 5 சதவீதத்தை ஒதுக்க வேண்டும்,2013 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசுத் துறைகளில் வழங்க வேண்டிய சட்டப்படியான 4 சதவீத பணியிடங்களை நிரப்பியது குறித்த அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 9 அன்று தமிழகம் முழுவதும் சுமார் 200 அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குடியேறி காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர்.இதனையடுத்து சங்கத்தின் தலைவர்களுடன் சமூக நலத்துறை செயலாளர் எஸ்.மதுமதி பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்து கோரிக்கைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு வார காலத்தில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதனால் பிப்ரவரி10 ஆம் தேதி போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, துறை செயலாளர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
100 மையங்களில்
இந்நிலையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தசட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்கியசெவ்வாயன்று (பிப்.23) 100 அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நடத்தினர்.சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் காமராஜர் சாலையில் உள்ளமாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், பொருளாளர் கே.பி.பாபு,நிர்வாகிகள் ஜீவா, பாரதி அண்ணா,மாரியப்பன் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.