tamilnadu

கோயம்பேடு சந்தை மூலம் பரவிய தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை, மே 10- சென்னையில் ஒரு வார காலத்துக்கு கொரோனா தொற்று எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்று கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த பின் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை பார்த்து மக்கள் அச்சப்பட தேவையில்லை.

சென்னையில் மிக அதிகளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 110 வார்டுகளில் 10-க்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு உள்ளது. கொரோனா பாதித்தவர்கள் அச்சம் கொள்ளாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். சென்னையில் 33 விழுக்காடு மக்கள் முக கவசம் அணிவதே இல்லை. உள்ளாடைகள் அணிவதை போல முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அனைவரும் குடையை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்களுடன் பிற நபர்கள் சகஜமாக பழகக் கூடாது. தமக்கு நோய் வராது என்று  கவனக்குறைவாக இருக்கக் வேண்டாம்.

அறிகுறி இன்றி வருவது நல்லது
அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்படுவது நல்லது. பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவரும், தங்களை முதலில் பாதுகாக்க வேண்டும்.முதியோர்கள், ரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில் மக்கள் சிப்பாய்களை போல செயல்பட வேண்டும். தொண்டை, மூக்கு வழியாகவே கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. பொது சுகாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணித்து கொள்ள வேண்டும். கோயம்பேடு சந்தையில் பரவிய வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது. கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 2 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மரண தருவாயில் உள்ளவர்களை காப்பாற்றுவதே எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

சுயகட்டுப்பாடு முக்கியம்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் குறிப்பிடுகையில், கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. நோய்த்தொற்று எங்கிருந்து வருகிறது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்றார். நாளை முதல் தளர்வுகள் அமலுக்கு வரும் சூழலில், மக்கள் சுயகட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்றாத மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்கள் சுயகட்டுப்பாடை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆணையர் கூறினார். ஒரு சில வட மாநிலங்களிடம் இருந்து ரயில் இயக்குவதற்கு அனுமதி கிடைக்காததால், தொழிலாளர்களை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் விரைவில் ரயில் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் ஆணையர் தெரிவித்தார்.