சென்னை:
பாலியல் ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி.ராகவனை கைது செய்து விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செவ்வாய்க்கிழமையன்று போலீஸ் டிஜிபியிடம் புகார் அளித்தார்.
தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவின் பேச்சாளராக அறியப்பட்டபாஜகவின் மாநிலப் பொதுச்செய லாளர் கே.டி. ராகவன் பெண்ணிடம் ஆபாச வீடியோ கால் பேசும் வீடியோ வெளியானது. இந்த விவகாரத்தில் அவரது சொந்த கட்சிக்காரர் மூலமாகவே சிக்கியுள்ளார்.பாஜகவை சேர்ந்த யூ டியூப்பரான மதன் ரவிச்சந்திரன் என்பவர் கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் சமீபத்தில் முன்னாள் பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர். இவர் ‘மதன் டைரீஸ்’ என்ற சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில், பார்ப்பதற்கு கே.டி.ராகவன் போல் இருக்கும் சட்டை அணியாத நபர் ஒருவர் பூஜை அறையில் அமர்ந்தபடி பெண் ஒருவருடன் வீடியோ கால் வாயிலாக ஆபாச செயல்களில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றி ருந்தன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசித்ததாகவும். இந்த வீடியோவை தில்லி தலைமைக்கு கொண்டு செல்ல 6 மாதங்கள் ஆகலாம். அதுவரை காத்திருக்க முடியுமா என அண்ணாமலை கேட்டதாகவும், பின்னர் ஒரு கட்டத்தில் தான் கூறியதகவலின் மீது இருந்த நியாயத்தின் அடிப்படையில், அவரே வீடியோவை வெளியிட்டுக் கொள்ள அனுமதித்ததாக கூறுகிறார் யூடியூப்பர் மதன். இந்நிலையில் பாலியல் ஆபாச வீடியோ வெளியானதால் வேறு வழியின்றி பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டிஜிபி அலுவலகத்தில் புகார்
இந்நிலையில் காங்கிரஸ் கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கே.டி. ராகவன் மீது வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் கூறுகையில், தமிழகம் அல்லாது இந்தியா முழுவதும் பாஜக தலைவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கடும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அவர்களின் தலைவர்களை தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. முதலமைச்சர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்து உள்ளதால் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.