சென்னை:
அறிவியல் வளர்ச்சி நிறுவனம் விஞ்ஞான் பிரசார் தமிழ் மொழியில் அறிவியல் பலகைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதையொட்டி இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னையில் நடைபெறவுள்ளது.இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் இயக்குநர் நகுல் பராசர், மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல் வளர்ச்சி நிறுவனம் விஞ்ஞான் பிரசார் தமிழ் மொழியில் அறிவியல் பலகை எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 3, 4 தேதிகளில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இதற்கான இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.கருத்தரங்கை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத் துடன் இணைந்து விஞ்ஞான் பிரசார் நடத்துகிறது. தமிழில் அறிவியல் பரப்புதல், பிரபலப்படுத்துதல், விரிவாக்கம், எதிர்காலப் பணிகள் என்ற தலைப்பில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள். அறிவியல் பிரசாரத்திற்கு பல்வேறு தளங்களில் உதவும் அரசு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள், அறிவியல் எழுத்தாளர்கள், ஊடகங்கள், அறிவியல் புத்தக பதிப்பாளர்கள், புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
அறிவியல் சிந்தனைக்கு வலுசேர்க்கும்
தமிழகத்தில் ஏற்கெனவே வலுப்பெற்றிருக்கும் அறிவியல் சிந்தனைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அறிவியல் மனப் பாங்கை அனைவரும் பெறுவதற்கான பணிகள் குறித்தும், தமிழில் அறிவியல் மென்மேலும் தழைத்தோங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இந்தக் கருத்தரங்கில் விவாதிக் கப்படும். இன்றைய சூழலில், அறிவியல் சிந்தனையை இந்திய மொழிகளில் எடுத்துச்செல்வது விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும். இதைச் செயல்படுத்தும் முதல் கட்டமாக தமிழ், வங்காளம், உருது, மராட்டி மொழிகளை இந்நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.
இணையத்தில் தமிழ்
2018இல் கூகுள் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் உலகின்அடுத்த 100 கோடி இணைய பயன்பாட்டாளர்கள் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளிலேயே இணையத்தைப் பயன்படுத்துவார்கள் எனக் கணித்துள்ளது. மேலும் புதிய இணைய பயன்பாட்டாளர்களில் பத்தில் ஒன்பது பேர் தமிழ் போன்ற பிராந்திய மொழிகளைப் பயன்படுத்துபவர்கள் என்றும், 2021இல் இணையத்தில் தமிழ் 4ஆம் இடத்தை பிடிக்கும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. அறிவியல் பலகை, பல புதிய அறிவியல் பதிப்புகளையும், செய்தி மடல்களையும் கொண்டுவர உள்ளது.
தமிழ்மொழியில் பட்டறைகள்
ஆண்டு முழுவதும் அறிவியல் தலைப்புகளில் கருத்தரங்கங்கள், பட்டறைகள் தமிழ் மொழியில் நடத்தப்படும். தமிழகத்தில் பல புதிய அறிவியல் அமைப்புகளை உருவாக்குவதுடன் கைவினை, கற்றல் செயல்பாடுகள், கற்றல் கருவிகள், அறிவியல் கவியரங்கங் கள், திரையிடல்கள் ஆகியவையும் நடத்தப்படும். சமூக இணைய தளங்களில் அறிவியல் பலகையின் பல்வேறு செயல்பாடுகளும் நிகழ்வுகளும் பதிவேற்றப்பட்டு, உரையாடல்கள் நிகழ்த்தப்படும்.இணையத் தமிழுக்கு வழங்கப் படும் பேராதரவு, தமிழ் பலகையை தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கு எடுத்துச்செல்ல உதவும். இந்திய மொழிகளில், அறிவியலை பரப்பும் மொழியாக தமிழ் மொழி உள்ளது. இந்தாண்டு விஞ்ஞான் பிரசார் அமைப்பு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும், பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிலரங்கங்கள் நடத்த உள்ளது. தமிழகத்தில் அறிவியலை பொதுச் சிந்தனையில் தொடர்ந்து புகுத்த புதியதோர் அறிவியல் தமிழ் அலையை உருவாக்கும் நோக்கில் விஞ்ஞான் பிரசார் செயல்படத் தொடங்கியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.பேட்டியின் போது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் எஸ்.சௌந்தரராஜப் பெருமாள், அறிவியல் பலகை முக்கிய குழு உறுப்பினர் பா.ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.