1950களும் 60களும் ஆர்எஸ்எஸ்சுக்கு முக்கியமான ஆண்டுகள். அந்தக் காலத்தில்தான் அதன் தலைவர் கோல்வால்கர் வகுப்புவாத விஷத்தை ஒரு பகுதி இந்துக்கள் மத்தியில் வெற்றிகரமாகப் பரப்பினார். அவரின் இந்தி மொழி உரைகள் பலவும் ஆங்கிலப்படுத்தப்பட்டு “சிந்தனைக் கொத்து” என்ற பெயரில் 1966ல் வெளியிடப்பட்டன. 1980களின் துவக்கத்தில் “ஞான கங்கை” என்ற பெயரில் தமிழில் வந்தது.ஆர்எஸ்எஸ்சின் தமிழ் ஏடாகிய “விஜயபாரதம்” பதிப்பகம் வைத்துள்ளது. அதன் சார்பாக இதன் நான்காம் பதிப்பு வெளியிடப்பட்டது. அதனுடைய இணையதளத்தில் 2017ல்கூட இதற்கான விளம்பரம் வந்தது. “கிறிஸ்தவ மதமாற்றம்- முஸ்லிம் பயங்கரவாதம்- கம்யூனிஸ்டுகளின் அராஜகம் பற்றி” இந்த நூல் பேசுகிறது என அதில் சொல்லப்பட்டதிலிருந்தே இதன் உள்ளுறையை உணர்ந்து கொள்ளலாம்.
நான்கு பகுதிகளைக் கொண்ட இந்தப் பெரு நூலின் முதல் பகுதி அவர்களது லட்சியத்தை விண்டுரைக்கிறது. அவர்கள் கட்டமைக்க விரும்பும் சமுதாயத்தில் மெய்யான அதிகாரம் அரசியல்வாதிகளிடம் அல்ல, “ஞானிகளிடம்” இருக்கும். ஆதிகாலத்தில் அப்படித்தான் இருந்தது என்பதை கோல்வால்கர் நினைவுகூர்ந்தார். அந்த ஞானிகள் யாரென்றால் “தர்ம சாஸ்திரக் காவலர்கள்” “அந்த உயர்ந்த அதிகார பீடத்தின் சொல்படி நடப்பவனே ராஜா” என்றார்.இதற்கு உதாரணமாக ராமாயணத்தை சுட்டினார். “ராவணன் ஒரு புத்திசாலி ஆக்கிரமிப்பாளன். அவனுக்கு நமது சமூக ஒருங்கிணைப்பின் ரகசியம் தெரியும். வனக் குடில்களில் வசிக்கும் ஞானிகள் மற்றும் முனிவர்களிடமே நமது சமுதாய வாழ்வின் உயிர்-மையம் உள்ளது என்பதை அவன் அறிவான். ஆகவே அவன் அந்தக் கானகக் குடில்கள் மீதும், அங்கே நடந்த யாகங்கள் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தான்” என்றார். அறிந்தோ அறியாமலோ ராமாயண மோதல் நடந்ததற்கான உண்மைக் காரணத்தை சொல்லி விட்டார் கோல்வால்கர். ஆனால் ராவணனை ஆக்கிரமிப்பாளன் என்றார் பாருங்கள் அது திரிபுவேலை. வான்மீகியைப் படித்தால் அவனது ஆளுகைக்குள் இருந்த பகுதிகளில் வந்து முகாமிட்டது முனிவர்களே என்றுபடுகிறது.
யாக கலாச்சாரத்தை எதிர்த்த ராவணனை ஒழிப்பதற்காக ராமனை தயார் செய்தது அந்த முனிவர்களே என்பதை அடுத்துச் சொன்னார். “விஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர் போன்ற முனிவர்களால் அந்த மாவீரன் தயார் செய்யப்பட்டான்...முடிவில் ராவணனின் உயிரை எடுத்த அஸ்திரத்தை ஸ்ரீராமனுக்கு தந்தது முனிவர் அகஸ்தியரே. அதர்ம சக்திகளின் கோட்டையாக இருந்த லங்காவின் சாம்பலிலிருந்து மீண்டும் சமுதாயம் இன்னும் அதிக உத்வேகத்தோடு எழுந்தது” என்றார். ஆக ராமாயண யுத்தம் தர்ம சக்திகளுக்கும் அதர்ம சக்திகளுக்கும் இடையில் நடந் தது. இங்கே தர்மம் என்பது வர்ண, யாக தர்மம்.
அதை போதிக்கும் முனிவர்கள் சொல்படி கேட்கும் ராஜாவைக் கொண்ட கட்டமைப்பு. அதர்மம் என்பது அவற்றை ஏற்காத போக்கு. அதனால்தான் லங்கா தகனம் நடந்தது. அப்படித்தான், தவமிருந்ததற்காக சூத்திரன் சம்புகனின் தலையை வாங்கினான் ராமன். ராமாயண காலத்தில் மட்டுமல்ல, அதற்கு அடுத்த காலத்திலும் சமுதாயத்தின் மெய்யான அதிகாரம் துறவிகளி டமே இருந்தது, அதற்கு உதாரணம் ஆதி சங்கரர் என்றார். “பௌத்த மார்க்கமானது தாய்ச் சமுதாயத்திற்கும், தாய் மதத்திற்கும் துரோகியாக மாறியது. அந்த இக்கட்டான கட்டத்தில் நமது தர்மத்தையும், நமது சமுதாயத்தையும் காக்கப் புறப்பட்டவர் யார்? ஞானிகள் மற்றும் முனிவர்கள் எனும் அதே பாரம்பரியம்தான் ஸ்ரீசங்கராச்சாரியார் எனும் வடிவத்தில் தனது சக்தியையும் ஆற்றலையும் காண் பித்தது. புத்தர் ஓர் அவதாரமாக நீடித்தாலும், ஒரு தனித்த மார்க்கம் என்றிருந்த பௌத்தம் தாய்மண்ணிலிருந்து அகற்றப்பட்டது” என்று குதூகலமாகக் கூறினார்.
ஆக பௌத்தத்தை வீழ்த்தியது அரசர்கள் அல்ல, சங்கரர் போன்ற முனிவர்களின் வழி காட்டுதல்படி நடந்துகொண்ட அரசர்கள். இந்தப் பாரம்பரியம் இப் போதும் தொடர வேண்டும் என்றார். அதாவது அகஸ்தியர், சங்கரர் மரபில் வந்துள்ள ஆர்எஸ்எஸ் சின் சொல் படி நடக்கிற ஆட்சியாளர்கள் வேண்டும் என்றார். ஆஹா, இன்று அதை சாதித்து விட்டார்களே.பழைய காலம் போல அதிகாரம் தங்களிடம்தான் இருக்க வேண்டும் என்று சொன்னது மட்டு மல்லாது அதன் மூலம் தாங்கள் கட்டமைக்க விரும்புகிற சமுதாயமும் பழைய காலத்தியதே என்றார் கோல்வால்கர். “கடவுள் தனக்குத்தானே வெளிப்படுத்திக் கொண்ட விராட் புருஷா இந்து மக்களே என்றார்கள் நமது முன்னோர்கள். ‘இந்து’ எனும் வார்த்தையை அவர்கள் பயன்படுத்தா விட்டாலும் புருஷ சூக்தத்தின் கீழ் வரும் விவரிப்பில் அது தெளிவாகிறது: ‘பிராமணர் தலை, ராஜா கைகள், வைஸ்யர் தொடைகள், சூத்ரர் பாதம்’. இதன் அர்த்தம் இந்த நான்கு வித ஏற்பாடுகளைக் கொண்ட மக்களே, அதாவது இந்து மக்களே நமது கடவுள்” என்றார்.
பிறப்பின் அடிப்படையில் பேதம் பார்த்து, அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட படிநிலை வர்ண சமுதாயமே கடவுளாம். வர்ணாசிரமத்தை கடவுளாக துதிக்கிறவர்கள் நிலைநாட்ட விரும்புகிற சமுதாயம் சாதிமயமானதே என்பதில் சந்தேகம் வேண்டாம்.இன்னும் சந்தேகம் இருந்தால் கோல்வால்கர் கூறிய இந்த மகா வார்த்தைகளைக் கேளுங்கள்: “வர்ண-வியாவஸ்த என்பது நமது சமுதாயத்தின் மற்றொரு முக்கிய அம்சம். இன்று அதை ‘சாதியம்’ என்று கேவலமாகக் கூறுகிறார்கள். அதில் உள்ள சமூக ஒழுங்கை சமூக பாகுபாடு என்று தவறாக எடுத்துக் கொள்கிறார்கள். தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஒரு தனிநபர் நிறைவேற்றுவதன் மூலமே அவர் கடவுளை துதிக்கிறார் என்கிறது கீதை.
கடவுளின் நான்குவித வெளிப்பாடாகக் கட்டமைக்கப்பட்டுள்ள சமுதாயத்தில் அவரவர் வழியில், அவரவர் ஆற்றலுக்கு ஏற்ப கடவுளை வணங்க வேண்டும்”. வர்ணாசிரமம்தான் சமூக ஒழுங்கு, அதை சமூக பாகுபாடு எனக் கருதக் கூடாது. அதாவது பிறப் பின் அடிப்படையில் சில பகுதியினரை தாழ்நிலையில் இருத்துவதுதான் இவர்களின் சமூக ஒழுங்கு. அதைப் போய் பாகுபாடு எனலாமோ? உங்கள் மீது குதிரை ஏறுவதுதான் நாங்கள் வகுத்துள்ள நியதி, அதை நீங்கள் நல்லபடியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.“ஆனால் இன்று சாதி முறைமை அடையாளம் தெரியாதபடி சீரழிந்து விட்டது” என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார் கோல்வால்கர். அதுமட்டுமா? “ஹரிஜனங்கள், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங் குடியினர் என்று பெயரிட்டு அவர்களைப் பணத்திற்கு அடிமையாக்க அவர்களுக்கு சிறப்புச் சலுகை கொடுத்து பிரிவினை உணர்வை அரசு இயந்திரம் ஊட்டுகிறது” என்றும் சொல்லியிருக்கிறார்.காலங்காலமாக இங்கிருக்கும் சாதியத்தால் இடஒதுக்கீடு போன்ற சிறப்புச் சலுகை வர வில்லை, அந்த இடஒதுக்கீட்டால்தான் சாதியச் சிந்தனை, பிரிவினை உணர்வு எழுகிறது. விஷயத்தை அப்படியே தலைகீழாகத் திருப்பி விட்டார் பாருங்கள்! இங்கு ஏற்கெனவே சாதி வேறுபாடு இல்லா திருமணங்கள் நடப்பது போலவும், அதைக் கெடுப்பது இடஒதுக்கீடே என்பது போலவும் கூறியதை நோக்குங்கள். இதன் நீட்சி அந்த இடஒதுக்கீட்டை ஒழிப்பதே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மத்திய தொகுப்பில் மருத்துவக் கல்வி இடங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒபிசியினருக்கு இடஒதுக்கீடு தரவில்லை என்றால் அதற்கான சித்தாந்தக் காரணி இங்கே இருக்கிறது.
இப்படிப்பட்டவர் பெண்களுக்கான இடஒதுக் கீட்டை ஒப்புக் கொள்வாரோ? “இப்போது ‘பெண்களுக்கு சமத்துவம்’, ‘ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை’ என்பதற்கு மவுசு ஏற்பட்டுள்ளது. அதிகாரத்தின் பல அடுக்குகளிலும் பாலின அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் எனப்படுகிறது. அப்படியாக சாதியம், வகுப்புவாதம், மொழிவாதம் இத்யாதி வரிசையில் பெண்ணியம் என்பதும் சேர்ந்துள்ளது” என்றார். பெண் உரிமை பற்றி எவ்வளவு கேலியும், கிண்டலும். இவர்கள் ஏன் ஆர்எஸ்எஸ்சில் பெண்களைச் சேர்ப்பதில்லை என்பது புரிந்ததா? அதிகாரத்தின் உயர்மட்டத்தில் அவர்களுக்கு இடம் தரக்கூடாது என்பதே இவர்களின் நிலைபாடு. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 1/3 இடஒதுக்கீடு பற்றி மத்திய ஆட்சியாளர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பேசாததன் மர்மம் விளங்கியதா?
இந்துராஷ்டிரம் என்ற பெயரில் தாங்கள் அமைக்க விரும்புகிற இந்த மனுராஷ்டிரத்தின் எதரிகள் யார் என்றும் சொல்லியிருக்கிறார். “உள்நாட்டு அபாயங் கள்” என்று மூவரைச் சொல்லுகிறார். அவர்கள்: “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்”. இதில் முதல் இருவர் பற்றி என்ன சொல்லியிருப் பார் என்பதை எளிதில் எவரும் ஊகிக்கலாம். இன் றைக்கு சங்பரிவாரத்தினர் அவர்கள் மீது சொல்லும் அவதூறுகளை எல்லாம் அன்றைக்கே சொல்லி விட்டார். கம்யூனிஸ்டுகளை ஏன் வெறுத்தார்?அவர்கள் இந்தியாவிலும் சோசலிசத்தை கொண்டுவர முனைகிறார்கள் என்பதால் வெறுத் தார். “சோசலிசம் நமது மண்ணில் விளைந்தது அல்ல, அது நமது ரத்தத்திலும் பாரம்பரியத்திலும் இல்லை” என்று ரத்த பரிசோதகராக அறிவித்தார்! “எல்லாரும் எல்லாப் பெரும்செல்வமும் எய்தலாலே/இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ” என்று சமதர்மத்தை முன்மொழிந்தவன் கம்பன். பாவம், இந்த பாரம்பரியத்தை அறியாதவர் அல்லது விரும்பாதவர் கோல்வால்கர். இவர்கள்தாம் “வசுதெய்வ குடும்பகம்” என்றும் அவ்வப்போது சொல்லிக் கொள்வார்கள். அதாவது இந்த உலகம் ஒரு குடும்பம் என்பார்கள். அப்படியெனில் நல்ல சிந்தனை உலகின் எந்தப் பகுதியிலிருந்து வந்தாலும் ஏற்க வேண்டியதுதானே?அது முடியாது. இவர்களது மனுதர்மம்தான் உலகம் முழுக்கப் பரவ வேண்டுமே தவிர சம தர்மம் அல்ல. இரண்டும் கறாரான முரண் கொள்கைகள் என்பதை கோல்வால்கர் அறிவார். அதனால்தான் கம்யூனிஸ்டுகளை மனமார வெறுத்தார். இன்று சங் பரிவாரத்தினர் தனியார் மயத்தை ஆதரிப்பதன் சூட்சமத்தை அறிய அன்று அவர்களின் குருஜி நிலச்சீர்திருத்தம்,
வங்கிகள்-தொழில்கள் நாட்டுமையாக்கம் போன்ற கோரிக்கைகளை எப்படிக் கடுமையாக எதிர்த்தார் என்பதை வாசிக்க வேண்டும். வர்ணரீதியாக மட்டுமல்ல வர்க்கரீதியாகவும் ஆர்எஸ்எஸ் அடித்தட்டு இந்துக்களின் எதிரி என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அவர் கம்யூனிஸ்டுகள் பற்றி எழுதியிருக்கும் பகுதி. மொத்தத்தில், “சிந்தனைக் கொத்து” என்பது மனுவாதப் பித்து!
(தொடரும்)