எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் உள்ள 7,618 எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுடன் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், மாநில மகப்பேறு செவிலியர் பயிற்சி நிறுவனம், தேசிய பயிற்சி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்; அரசு மருத்துவமனைகளில் 25 புதிய போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; சிதலமடைந்த 1,823 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்; சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.147.00 கோடியில் பல்நோக்கு உயர்சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்படும்; கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரூ.125 கோடி மதிப்பில் உயர் சிறப்புச்சிகிச்சைக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.