அடங்காத ஆளுநர்
அரசியல் சட்டத்திற்கே சவால் விடும் வகையில் அடாவடியாக நடந்து கொள்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. உச்சநீதி மன்றத்திற்கே சவால் விடும் வகையில் சவடால் அடிக்கும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும், தனக்கு துணை சேர்த்துக் கொள்கி றார். இது இவர்களது சதிராட்டம் அல்ல. மாறாக, இவர்களை ஆட்டி வைக்கக்கூடிய பிரதமர் நரேந் திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது திருவிளையாடலே ஆகும்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றும் வகையில் தமிழக சட்டப் பேரவையில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த நிலையில் 10 சட்ட முன்வரைவுகளை எவ்வித காரணமு மின்றி திருப்பி அனுப்பினார்.
சட்டப் பேரவை மீண்டும் இந்த சட்ட முன் வரைவுகளை நிறைவேற்றி அனுப்பிய நிலையில், அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இதனால் தமிழக அரசு உச்சநீதிமன் றத்தின் கதவுகளைத் தட்டிய நிலையில், ஆளுநரின் தலையில் உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டியது. ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் சட்ட முன்வரைவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு கால வரையறையையும் தீர்மா னித்தது உச்சநீதிமன்றம். மேலும் ஆளுநர் ஆர். என்.ரவியின் செயல் சட்ட விரோதம் என்று அறி வித்ததோடு, தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை யும் பயன்படுத்தி தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு சட்ட அங்கீகார மும் வழங்கியது.
இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கொஞ்சம் கூட வெட்கப்படவோ, கூச்சப்படவோ இல்லை. குடியரசு துணைத் தலைவர் என்ற உயர்ந்த பொ றுப்பிலிருக்கும் ஜெகதீப் தன்கர் உச்சநீதிமன் றத்தையே விமர்சித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவருடன் ஆலோசனை நடத்திய நிலையில், துணை வேந்தர்களின் போட்டிக் கூட்டத்தை ஊட்டி யில் கூட்டியுள்ளார் ஆளுநர். இதில் குடியரசுத் தலைவரும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை வேந்தர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கூட்டிய நிலையில், ஆளுநர் இந்தக்கூட்டத்தை கூட்டுவது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பி னால் பயிற்றுவிக்கப்பட்ட இவர்கள் அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்க முயல்கிறார்கள்.
பாஜக எம்.பி.க்கள் உட்பட உச்சநீதிமன் றத்தை வரம்பு மீறிய வார்த்தைகளால் விமர்சிக் கின்றனர். ஆளுநர் கூட்டியுள்ள கூட்டத்தை துணைவேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள் ளது. கல்வியை முற்றாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது சில தனிநபர்களுக்கு இடையிலான மோதல் அல்ல, அரசியல் சட்ட அமைப்புகளையே நிலை குலைய வைக்க முயல்வதை அனுமதிக்க முடியாது.