tamilnadu

img

ஆளுநர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீதான ஆளுநர் கருத்துகளை நிராகரிக்கும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவானது, நிதி சட்ட முன்வடிவு என்ற வகைப்பாட்டில் வருவதால் இதனை பேரவையில் ஆய்வு செய்ய ஆளுநரின் பரிந்துரை பெறப்பட வேண்டும். பொதுமக்களின் கருத்தை அறிந்து, வரப்பெற்ற கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, மக்களாட்சியை ஒரு தூணாக கருதப்படும் நிர்வாகத்தால் இந்த சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு, சட்டத்துறையால் சரிபார்க்கப்பட்டு, பல கட்டங்களாக பரிசீலிக்கப்பட்டு இந்த சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
அனால், ஆளுநர் அரசமைப்பு சட்டத்தின்படி பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல், இச்சட்ட முன்வடிவில் உள்ள பிரிவுகள் குறித்து தனது கருத்தை தெரிவித்து, அந்த கருத்துக்களை சட்டப்பேரவை உறுப்பினர்களின் கவனத்துக்கு பொருத்தமான முறையில் கொண்டுவர வேண்டுமென தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட முன்முடிவுகள் மீது திருத்தங்கள் முன்மொழிய சட்டப்பேரவை  உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது; சட்ட முன்முடிவுகள் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன் மீது கருத்து தெரிவிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, அவரது பரிந்துரைகள் சட்டத்திற்கு புறம்பானது. எனவே, ஆளுநர் செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது என முதலமைச்சர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்த, சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீதான ஆளுநர் கருத்துகளை நிராகரிக்கும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.