tamilnadu

img

உயர்த்தப்பட்ட தொகையை குறைத்திடுக.... கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களின் வாடகை, குத்தகை தொகையை தள்ளுபடி செய்திடுக.... முதலமைச்சருக்கு கோரிக்கை...

சென்னை:
தற்போது கொரோனா நெருக்கடி காலத்தில், கோவில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான வாடகை, குத்தகை தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்துசமய நிலங்களை பயன்படுத்துவோர்  பாதுகாப்பு சங்கத்தின் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன், முதலமைச்சர்மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வணக்கத்தையும் தங்களின் அயராத மக்கள் பணிகளுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழகம் முழுவதும் பல தலைமுறைகளாக கோவில், மடம், வக்ஃபோர்டு, தேவாலயங்கள், அறக்கட்ட ளைகள் உள்ளிட்டவற்றின் இடங்களில் குடியிருப்பவர்கள், குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடைவைத்திருப்போர் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கடந்த ஆட்சி காலத்தில் கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது.

2004ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா  நியாய வாடகை நிர்ணயம் என்றபெயரில் வாடகையை பல மடங்கு உயர்த்தினார். உயர்த்தப்பட்ட வாடகையை கட்டமுடியாமல் பயனாளிகள் கடும்சிரமத்தை சந்தித்தனர். பிறகு திராவிடமுன்னேற்ற கழகம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு முதல்வர் கலைஞர்அவர்கள் உயர்த்தப்பட்ட வாடகையைகுறைத்து அரசாணை 456, 298 வெளியிடப்பட்டு முறைப்படுத்தப்பட்டதோடு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை 15 சதம்வாடகை உயர்வு என தீர்மானிக்கப் பட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக அரசாணை 456, 298ஐ பின்பற்றாமல் கிடப்பில் போட்டனர். மீண்டும்வாடகை உயர்வை கூடுதலாக்கினர். பயனாளிகளின் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த சூழலில் ஆட்சியின் கடைசிநேரத்தில் அரசாணை 318-ஐ வெளியிட்டனர். இதன் மூலம் நீண்டகாலமாக கோயில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு முதல் தவணையாக சுமார் 18 ஆயிரம் நபர்களுக்கு இலவச பட்டா வழங்குவதாக அறிவித்தனர். அதுவும்செயல்பாட்டிற்கு வராமல் நீதிமன்றத்தில் வழக்கும், பட்டா கொடுக்கக் கூடாது என்ற இடைக்கால தடையாணையும் உள்ளது. இந்த நிலையில் எங்கள் அமைப்பின்சார்பில் கடந்த 20.2.2021 அன்று சென்னையில் பயனாளிகளின் வாழ்வுரிமை கோரிக்கை மாநில மாநாட்டை நடத்தினோம். பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பியும் கலந்து கொண்டுகோரிக்கைகளை ஆதரித்து பேசினார். எனவே கீழ்கண்ட எங்களது கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். 

கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வாடகை, குத்தகை தொகையினை தள்ளுபடி செய்திட வேண்டும். பலமடங்குகள் உயர்த்தப்பட்ட வாடகை, குத்தகை தொகையினை குறைத்திட வேண்டும்.அறநிலைய சட்டப்பிரிவு 78, 79 பயன்படுத்தி வீடுகளை பூட்டி சீல்வைப்பது,வீட்டை காலி செய்வது போன்ற நடவடிக்கைகள் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதை போல் இல்லாமல், இனி தவிர்க்க வேண்டுகிறோம்.
அறநிலைய சட்டம் 34இன் படி பல தலைமுறைகளாக கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அந்தந்த இடங்களுக்கான நியாயமான விலையை தீர்மானித்து கிரயத்தொகையை தவணை முறையில் பெற்றுகொண்டு இடங்களை பயனாளிகளுக்கு சொந்தமாக்கிட வேண்டும்.கிரயத் தொகை கோரிக்கை நடைமுறைக்கு வரும் வரை அடிமனை நீங்கலாக அதில் கட்டியுள்ள  வீடுகளை, கடைகளை, சட்டரீதியாக வாங்கவும், விற்கவும் அனுமதிக்க வேண்டும். 

அறநிலையத்துறையினரால் அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் சம்பந்தப்பட்ட  கோவில் இடங்களில்உள்ள பயனாளிகளும் இடம்பெற வேண்டும். அறநிலையத்துறையை முற்றிலும் சீரழித்து தேவையற்ற அவதூறுபிரச்சாரங்கள் மூலம் அறநிலையத் துறையே தேவையில்லாத ஒன்று என்றுதவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு, கோவிலையும் அதன்  சொத்துக்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்கும் மதவெறி  அமைப்புகளின் செயல்பாட்டை தடுத்து, அறநிலையத்துறையை பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்த மனுவின் நகல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும்   ஆணையருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.