ஏழை, எளிய மக்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்க வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் கிராமத்தில் சர்வே எண் 544/1 கல்லாங்குத்து புறம்போக்கு வகைப்பாட்டு நிலத்தில் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் 122 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு நிலம் அளந்து கொடுக்கப்படாத நிலையில் சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் மக்கள் பலகட்டபோராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியை சார்ந்த இந்து முன்னணி, பிஜேபி நிர்வாகிகள் சிலர் நிலத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர்.
ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை பயனாளிகளுக்கு வழங்கிடக் கோரி 2024 டிசம்பர் 16 பெருமாநல்லூரில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை நோக்கி நடை பயணம், 2024 செப்டம்பர் 30 அன்று அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம், 2025 ஆகஸ்ட் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை திரட்டி அவிநாசி வட்டாட்சியரிடம் மனு, 2025 செப்டம்பர் 30 ஆம் தேதி தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி தலைமையில் குடியேறும் போராட்டம் என தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதே காலத்தில் எதிர் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோயில் இடம் என தாக்கல் செய்த தவறான மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நிலத்தை அளந்து தர வருவாய் துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 17.10.2025 அன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவில் அவிநாசி வட்டாட்சியர் அவர்கள் மனுதாரர்களின் பட்டா இடத்தை 6 வார காலத்திற்குள் அளந்து தர வேண்டும் எனவும் இதில் மூன்றாம் தரப்பினரால் ஏதாவது இடையூறு ஏற்பட்டால் காவல்துறை பாதுகாப்பை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவு கிடைத்ததற்கு பின்னால், நீதிமன்ற உத்தரவை அமலாக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், அவிநாசி வட்டாட்சியர், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.
தொடர்சியாக 24.12.2025 அன்று தீஒமு, சிபிஐ(எம்) சார்பாக அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இத்தகைய தொடர்ச்சியான போராட்டங்களின் வெற்றியாக 07.01.2026 அன்று வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு நிலத்தை அளந்து வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகம் உடனடியாக பயனாளிகளுக்கு வீட்டு மனைகளை அளந்து கொடுத்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்குமாறு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது. என்று மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
