கடலூர் மாவட்டத்தில் 11 மையங்களில் மறியல்
மே 20 வேலை நிறுத்தம்
கடலூர், மே 8- பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், 4 தொழிலாளர் நலச் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் மே 20 ல் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை கடலூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக்குவது குறித்து அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் கடலூர் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது தொமுச செயலாளர் பா.திருமாவளவன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.சங்கமேஸ்வரன், எஸ்.சாந்தகுமாரி, மாவட்ட இணை செயலாளர்கள் வி.திருமுருகன், கே.ஸ்டாலின், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். குணசேகரன், ஐஎன்டிசி மாவட்ட துணைத் தலைவர் கே.பிரபாகரன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மே 13 அன்று கடலூர் புதுப்பாளையத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது, வேலை நிறுத்தத்தையொட்டி 12 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் தொழிலாளர்களிடம் விநியோகம் செய்வது,மே 20 அன்று கடலூர் மாவட்டத்தில் மற்ற சகோதர சங்கங்களோடு இணைந்து 11 மையங்களில் வேலை நிறுத்த மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
பொதுக்கழிப்பிடம் கோரி கையெழுத்து இயக்கம்
துறைமுகம் பகுதி, திருவள்ளுவர் நகரில் வசிக்கும் மக்களுக்கு அருகாமையில் இருந்த பொதுக் கழிவறை இடிக்கப்பட்டு விட்டது. இதனால் அங்குள்ள மக்கள் இயற்கை உபாதையை கழிக்க ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, திருவள்ளுவர் நகர் அருகாமையிலேயே பொதுக்கழிப்பிடம் அமைத்து தர வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.