tamilnadu

img

ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகாவை சந்தித்து பெ.சண்முகம் வாழ்த்து!

ஆசிய இளையோர் மகளிர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை அவரது இல்லத்தில் சந்தித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்து தெரிவித்தார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றது. சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா துணை அணித்தலைவராக இருந்து, சிறப்பாக விளையாடி, அணியின் அசாத்தியமான வெற்றியைத் தேடித்தந்தார்.
சென்னை கண்ணகி நகரில் உள்ள இல்லத்தில் அவரை சந்தித்து செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து புத்தகத்தை பரிசாக வழங்கினர். கார்த்திகாவின் பயிற்சியாளர் ராஜிக்கும், கார்த்திகாவின் சகோதிரியும் கபடி வீரங்கனையான காவ்யாவிற்கும் ஆடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின் பேசிய பெ.சண்முகம், கண்ணகி நகரில் அரசு பள்ளியில் கார்த்திகாவும், அவரது தங்கை காவ்யாவும் படிக்கின்றனர். கார்த்திகாவின் தந்தை ரமேஷ் சென்ட்ரிங் வேலையும், தாய் சரண்யா ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். 100 சதுர அடி பரப்பளவில் இருந்து இந்த சாதனையை புரிந்து தமிழகத்திற்கும், கண்ணகி நகருக்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளார். இன்னும் அவர் பல வெற்றிகளைக் குவித்து இந்தியா, தமிழகத்தின் மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்துவார்.
தமிழக அரசு கார்த்திகாவிற்கு வீடு வழங்க வேண்டும், கார்த்திகா தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளத் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் அரசு செய்ய வேண்டும். கண்ணகி நகர்ப் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு திடலை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.