சென்னை:
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிகளை குறித்த காலத்திற்குள் திறக்க முடியவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கி உள்ளன.இந்த ஆன்லைன் வகுப்புகள் வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றும், ஏழைகளுக்கு சாத்தியம் இல்லை என்றும் பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். வகுப்பறையில் நேரடியாக நடத்தப்படும் வகுப்புகள் போன்று ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு பலன் அளிக்காது என்றும் கூறுகின்றனர்.இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மாணவரின் தாய் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடும் என்றும், ஏழை மற்றும் வசதிபடைத்த மாணவர்களுக்கு இடையில் சமமற்ற நிலை உருவாகும் என்றும் கூறியுள்ளார்.விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.