சிதம்பரம்,செப்.13- கடலூர் மாவட்டம் சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் சம்பா சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் குடிமராமத்து பணியில் ஒரு கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதை கண்டித்தும், பல வாய்க்கால்களை வெட்டாமல் வெட்டியதாக பணம் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கற்பனைச் செல்வம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் செல்லையா ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. மாதவன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், சதானந்தம், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர்கள் ஒன்று திரண்டு, ஊழலுக்கு துணை போன அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனுவும் அளித்தனர்.