சென்னை:
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறை ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்கிறது.
கல்வியின் தரத்தை மேம்படுத்துவதாக கூறும் மத்திய பாஜக அரசு, புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கியுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற் கொள்ளவும் இந்த புதிய கல்வி கொள்கையில் வழிவதை செய்யப் பட்டுள்ளதாக மோடி அரசு கூறியுள்ளது.மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டு வரும் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளன. இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை தான் அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த கல்விக் கொள்கையில் உள்ள சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளித்திட உயர் கல்வித் துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைத்து அரசு ஆணை செப்டம்பர் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் உள்ளிட்ட தொடர்ந்து எதிர்ப்பு வருவதோடு சட்டமன்றத்திலும் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி குரல் எழுப்பின.இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை செப்டம்பர் 24 அன்று ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்கிறது. இதில் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர் கள், கல்லூரி நிர்வாகத்தினர் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.அதன்படி சென்னை பல் கலைக்கழகம், திருவள்ளூர் பல் கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியில் மற்றும் ஆசிரியர் பல் கலைக்கழகம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவை ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் காலை 9.30 முதல் 11.30 மணி வரை மாணவர்களிடமும், மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை பெற் றோர்களிடமும், மதியம் 2. 30 மணி முதல் 4 மணி வரை ஆசிரியர்களிடமும் கருத்து கேட்கப்படுகிறது.
உயர் கல்வித் துறை சார்பில் நாளை கருத்துக்கேட்பு கூட்டம்
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் காலை 9.30 முதல் 11.30 மணி வரை ஆசிரியர்களிடமும், மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை மாணவர்களிடமும், மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை பெற்றோர்களிடமும் கருத்து கேட்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல் கலைக்கழகம், அன்னை தெரசா பெண்கள் பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கீழ் உள்ள கல்லூரிகளில் காலை 9.30 முதல் 11.30 மணி வரை பெற்றோர்களிடமும், மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை ஆசிரியர்களிடமும், மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை மாணவர்களிடமும் கருத்து கேட்கப்படுகிறது.மேலும், ஒவ்வொரு பல்கலைக் கழகங்கள் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளிலிருந்து 20 முதல் 25 நபர்கள் இதில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.