tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கை... கருத்து கேட்பு பயனற்றது இடைநிலை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

சென்னை:
தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த கருத்து கோரி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு பயனற்றது என்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய கல்வி கொள்கை குறித்து ஆக.31க்குள் ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் இணையதளம் வாயிலாக கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரியுள்ளது. இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. மாநில அரசின் கருத்துக்களை கூட எதிர்பார்க்காமல், நேரடியாக ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. எனவே இதுதொடர்பாக தமிழக அரசு தனது நிலையை தெரிவிக்க வேண்டும்.தேசிய கல்வி கொள்கை குறித்து இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே உள்ளது. பலமொழிகள் பேசக்கூடிய நாட்டில், அவரவர் தாய்மொழியில்தான் நன்கு புரிந்து கருத்து தெரிவிக்க முடியும். எனவே, இரு மொழிகளில் மட்டும் கருத்து கேட்பது எவ்விதத்தில் பயன் தராது.

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கடந்தாண்டு வெளியிடப்பட்டது. அதன்மீது நாடு முழுவதும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் அமைப்புகள் தெரிவித்த கருத்துக்களை புறந்தள்ளி வரைவு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் உள்ள பாதகமான அம்சங்களை எவ்வாறு செயல்படுத்துவது என ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது வேடிக்கையாக உள்ளது. அதிலும் கருத்து கூறும் ஆசிரியரின் பெயர், முகவரி, பணியாற்றும் பள்ளியின் மின்னஞ்சல், பணியாற்றும் பள்ளியின் யுஇஐஎஸ்இ எண், அலைபேசி எண் உள்ளிட்ட அனைத்தையும் கேட்பது ஆசிரியர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதை தடுக்கும் செயலாகும்.

எனவே, இந்த கருத்து கேட்பு எந்தப்பயனையும் தராது. தேசிய கல்வி கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உட்பட அமைப்புகள் தெரிவித்த ஆக்கபூர்வமான கருத்துக்களை உள்ளடக்கிய தேசிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல், விவாதித்து நடைமுறைபடுத்த வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.