ஊதிய உயர்வை அமல்படுத்தக்கோரி டேன்டீ தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உதகை, பந்தலூரில் டேன் டீ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தேயிலை தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் 40 பைசா வழங்கப்படும் என்று அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டது. ஆனால், இதுவரை அந்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதை கண்டித்து பந்தலூரில் திங்களன்று தொழிலாளர்கள் பேரணி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டேன் டீ தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதில் டேன்டீ அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு எல்பிஎப் துணை பொதுச்செயலாளர் மாடசாமி, பிடபிள்யுயுசி பொதுச்செயலாளர் சுப்பிரமணியம், சிஐடியு செயலாளர் ரமேஷ், ஐஎன்டியுசி லோகநாதன், ஏஐடியுசி தலைவர் பெரியசாமி உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
இதேபோன்று, டேன்டீ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட இடங்களிலும், டேன் டீ தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.