india

img

பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரேயொரு நிருபராக தனித்து கலந்து கொண்ட அனுபவம்

ஏ.எம்.ஜிகீஸ், தி ஹிந்து, 2023 பிப்ரவரி 17

தொழிற்சங்கங்கள் கோடிக்கணக்கான உறுப்பினர்களுடன் இருக்கின்ற போதிலும்,  அவற்றின் கோரிக்கைகள், செயல்பாடுகளை ஊடகங்கள் பெரும்பாலும் புறக்கணித்தே வருகின்றன

மத்திய தொழிற்சங்க அமைப்பு ஒன்றின் தேசியத் தலைமையுடனான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு சமீபத்தில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தத் தொழிற்சங்கம் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கு எதிரான போராட்டம் ஒன்றைத் தொடங்கியிருந்தது. அது ஒருசில விஷயங்களில் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்த காரணத்தால் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியமான சில செய்திகளைப் பெறுவதற்கு எனக்கு  உதவக்கூடும் என்றே நான் கருதினேன். அந்தக் கூட்டத்தில் தொழிற்சங்கத்தின் தேசியச் செயலாளர்களில் ஒருவர் உரையாற்றவிருந்தார்.      

வளர்ந்து வரும் துறைகளில் தொழிற்சங்கங்களின் பங்கு

அந்த இடத்தை நான் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே அடைந்து விட்டேன். அங்கே சிறிது நேரம் எதுவுமே நடக்கவில்லை. சங்கத்தின் ஊழியர்கள் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்பதற்காக மாறி மாறி என்னிடம் வந்து கொண்டே இருந்தனர். அரைமணி நேரம் கழிந்த பிறகும் அங்கே ஒரே நிருபராக நான் மட்டுமே இருந்தேன். தொடர்ந்து பரபரப்பாக அழைப்புகளை மேற்கொண்டவாறு இருந்த அமைப்பாளர்கள் இறுதியில் யூடியூபர் ஒருவரை அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்தனர். பாராளுமன்றத்தை நோக்கி பேரணி, அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் தர்ணா நடத்துவது என்று போராட்டத்திற்கான நிகழ்ச்சிகளை தொழிற்சங்கத்தின் தேசியச் செயலாளர் அறிவித்தார். போராட்டம் பற்றி சில கேள்விகளை அவரிடம் எழுப்பிய போதிலும், நிருபர்கள், புகைப்படக்காரர்களுக்காக வாங்கப்பட்டிருந்த பெங்காலி ஸ்வீட்ஸ் கடையின் ஐம்பது சிற்றுண்டி பாக்கெட்டுகள், இரண்டு பெரிய பிளாஸ்க்குகளிலிருந்த தேநீர், காபியை அந்தத் தொழிற்சங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை மட்டும் நான் அங்கே கேட்கவில்லை. அதற்குப் பின்னர் பாராளுமன்றம் நோக்கி நடைபெற்ற இருபத்தைந்தாயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்ட அந்தப் பேரணியை நான் செய்தியாக்கினேன், பாதுகாப்பு நிறுவனங்கள் உட்பட பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலாக அந்தப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.       

இதுபோன்ற நிகழ்வுகள் ஒன்றும் புதிவையல்ல. நான் நீண்ட காலமாக தொழிற்சங்கங்கள் குறித்த செய்திகளைச் சேகரித்து அளித்து வருகிறேன். தொழிற்சங்கங்களின் அரசியல் சார்புகளுக்கு அப்பால் பத்திரிகையாளர்கள் தொழிற்சங்க நிகழ்வுகளில் கலந்து கொள்வது என்பது மிகமிகக் குறைவாகவே இருந்து வருகிறது. மூத்த தொழிற்சங்கத் தலைவர் எம்.கே.பாந்தே ஒரு முறை செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பேசிக் கொண்டிருந்த போது. இந்தியாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்துகின்ற வேலைநிறுத்தத்தில் எத்தனை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் என்பதை அறிந்து கொள்வதற்கு பிபிசி, தி கார்டியன் போன்ற மேற்கத்திய ஊடகங்களின் செய்திகளையே தான் சார்ந்திருக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையே தொழிலாளர்களின் நலனுக்கான அச்சுறுத்தலாகும்

நாட்டிலுள்ள பன்னிரண்டு மத்திய தொழிற்சங்க அமைப்புகளில் மொத்தம் ஆறு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநில அரசுகளால் அவ்வப்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சரிபார்ப்பு செயல்முறை சில காலமாக நடைபெறவே இல்லை. மிஸ்டு கால்கள் மூலமாக கட்சியில் உறுப்பினர்களை அனுமதிக்கின்ற அரசியல் கட்சிகள் போலல்லாமல், இந்த சங்கங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை தணிக்கை செய்யப்பட்டே வருகிறது. தொழிற்சங்கங்கள் தங்கள் அறிக்கையை தொழிற்சங்கப் பதிவாளரிடம் ஆண்டுதோறும் தாக்கல் செய்து வருகின்றன. வரவு-செலவு கணக்குடன் உறுப்பினர் ரசீது தாக்கல் செய்யப்பட வேண்டியதும் கட்டாயம் என்றிருக்கிறது. இந்த தொழிற்சங்கங்களுடன் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்பு கொண்டிருந்த போதிலும், தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய பிரச்சனைகளுக்கும் கிடைக்கின்ற பாதுகாப்பு என்பது மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது.    

தொழிலாளர்கள், விவசாயிகள், வேலையற்ற இளைஞர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து எழுப்பி வருகின்ற. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கின்றன. அவற்றின் நிலைப்பாடு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூட்டங்களில் மதிப்பீடு செய்யப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. இந்தியத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளின் பேச்சை உலக அரசாங்கங்கள், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் கவனித்துக் கேட்டறிந்து கொண்டதை சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூட்டத்தில் என்னால் காண முடிந்தது. ஆனால் இந்திய ஊடகங்களால் இந்திய தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள், கோரிக்கைகள் போன்றவை பெரும்பாலும் கவனிக்கப்படுவதே இல்லை.

தொழிற்சங்கங்களின் முன் உள்ள சவால்கள்    

தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து தங்களிடமிருக்க வேண்டிய சார்பு எதுவுமற்ற அடிப்படைக் கொள்கையை பல ஊடக நிறுவனங்கள் மறந்து போய் விட்டன என்று தொழிற்சங்க இயக்கத்தில் சுமார் ஐம்பது ஆண்டுகளாகப் பணியாற்றிய மூத்த தொழிற்சங்கத் தலைவர் அமர்ஜித் கவுர் கூறுகிறார். மேலும் ‘புதிய தாராளவாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தொழிற்சங்கங்களை, தொழிலாளர்களைப் புறக்கணிக்கின்ற இத்தகைய போக்கு உத்வேகம் பெற்றுள்ளது. தொழிற்சங்கங்கள் வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து சித்தரித்து வருகின்றன. பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் முதலாளிகள், அரசு சார்புடையவையாகவே இருக்கின்றன. தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பை அந்த ஊடகங்களால் எளிதாகப் புறக்கணிக்க முடிகிறது’ என்று அவர் கூறுகிறார். ‘பிபிசி, ஏஎஃப்பி மற்றும் பிற ஊடகங்கள் தருகின்ற செய்திகளுக்கே நாம் நன்றி சொல்ல வேண்டியுள்ளது. அந்தச் செய்திகளின் மூலமாகவே பிரிட்டனில் செவிலியர்கள், பிரான்சில் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்களைப் பற்றி நமக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால் ஜார்க்கண்டில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்துள்ளது?’  என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார்.      

பொதுவாக இதுபோன்ற நிலையையே விவசாய சங்கங்களிடமும் ஊடகங்கள் கடைப்பிடிக்கின்றன. ஆனாலும் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இடைவிடாமல், உத்வேகத்துடன் அனைவரும் கவனிக்குமாறு விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் ஊடகங்களில் மிகப் பரவலாக இடத்தைப் பிடித்தன. தொழிற்சங்கங்களும் அதுபோன்ற பரவலான எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று ஊடகங்களின் சில பகுதிகள் ஒருவேளை காத்திருக்கின்றனவோ என்னவோ!  

https://www.thehindu.com/opinion/op-ed/the-experience-of-being-the-only-reporter-at-a-press-conference/article66516214.eceதமிழில்

தா.சந்திரகுரு