தமிழகத்தின் 1018 ஊர்களின் - இடங்களின் பெயர்கள் தமிழில் எழுதவும், உச்சரிக்கவும் செய்வதுபோலவே இனி ஆங்கிலத்திலும் எழுதப்பட வேண்டும் என்றொரு அரசாணை வந்துள்ளது. இப்படியான முயற்சிகள் வரவேற்கத் தக்கதுதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
காலனி ஆட்சியின்போது ஆங்கிலேயர்கள் தங்களின் வாய்க்கு எப்படியெல்லாம் உச்சரிக்கவருமோ அப்படியெல்லாம் நம் ஊர்களின் பெயர்களை அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியும், உச்சரித்தும் வந்தார்கள். நம்மில் படித்த வர்க்கம் அதனை நாகரீகத்தின் அடையாளம் என்றே கருதி, அதையே பின்தொடர்ந்து இன்றுவரையில் அப்படியே எழுதப்பட்டும், உச்சரிக்கப்பட்டும் வருவதானது நாம் அடிமை நிலையிலிருந்து இன்னமும் முழுதாய் விடுதலை பெற்றிட வில்லை என்றே
உணர்த்தியது.
இப்போதேனும் அதில் மாற்றம் வருவது நல்லதுதான்.தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியா முழுதும், ஏன் ஆங்கிலேயக் காலனி ஆதிக்கம் நிலவிய நாடுகளிலெல்லாம் மிகநீண்ட காலமாக இதுவே நடைமுறை. அண்மைக் காலமாகத்தான் இதனை மாற்றவேண்டும் என்கிற விழிப்புணர்வும் எல்லா இடங்களிலும் வந்திருக்கிறது. அப்படித்தான் ஸ்ரீலங்கா அல்லது இலங்கைஆகியிருக்கிறது சிலோன். மலேசியா ஆகியிருக்கிறது மலேயா. மியான்மர் ஆகியிருக்கிறது பர்மா. நம்நாட்டில் பாம்பே இப்போது மும்பைஆகவும், கல்கட்டா இப்போது கொல்கத்தாஆகவும், டிரிவேன்டிரம் திருவனந்தபுரமாகவும் ஆகியிருக்கின்றன. இன்னமும்கூட இவ்வாறான பெயர் மாற்றும் பணிகள் தொடரவும் செய்கின்றன. தமிழ்நாடு அரசு சார்பில் இப்போது வெளியாகியுள்ள அரசாணையின்படி எழும்பூர், திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, தூத்துக்குடி, செஞ்சி, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பல ஊர்களும் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்பவே ஆங்கிலத்திலும் எழுதும் முறையை வலியுறுத்துகிறது.
பலரும் இதனை வரவேற்றுள்ளபோதிலும், ஐயங்களையும் தெரிவிக்கவே செய்கின்றனர். இதற்கு இந்தப் பேரிடர் காலத்தில் என்ன அவசரத் தேவை வந்துவிட்டது என்று கேட்போரும் உண்டு. இந்த மாற்றங்களைத் தவறு என்றோ,தேவையற்றது என்றோ சொல்லி முற்றாக ஒதுக்கிவிட முடியாதுதான். ஆனாலும் நமக்கு இந்தப் பெயர் மாற்றும் பணியில் அரசு இன்னும் சற்றே நிதானம் காட்டியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. மொழியியல் சார்ந்த தெளிவான நடைமுறைகளும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லையோ என்றும் தோன்றுகிறது. உதாரணத்துக்கு எழும்பூர் என்பது இதுவரையில் ஆங்கிலத்தில் Egmore என்று எழுதப்பட்டு, எக்மோர் என்று உச்சரிக்கப்பட்டும் வந்தது. அது தற்போது Ezhumboor என்று மாற்றப்பட்டுள்ளது.
இது மிகச்சரியான மாற்றம் என்றால், அதாவது தமிழ் மொழியின் ஒலியியலின்படி எழும்பூரின் “ம் + பூ” என்பது “mboo” என்றே உச்சரிப்புப் பெறும் என்பது மிகச்சரி என்று எடுத்துக்கொண்டால், அதனடிப்படையில் கோயம்புத்தூர் என்பதிலுள்ள “ம்பு” என்பதும் “mbu” என்றே மாறி Koyambuththoor என்றுதான் மாற்றம் பெற்றிருக்கவேண்டும். ஆனால், அப்படி மாறுவதற்கு பதிலாக Koyampuththoor என்று அரசாணை சொல்கிறது. ஒலிப்பு முறையின் ஒன்றுபட்ட தன்மைதான் ஒரு மொழியைக் குழப்ப
மின்றி எல்லோரும் புரிந்துகொள்ளும்படி செய்யும். நமது மொழியியலாளர்களை எந்த அளவுக்கு இது தொடர்பில் அரசு முறையாகப் பயன்படுத்திக்கொண்டது என்றும் தெரியவில்லை. 'இவ்வாறே, வேலூர் தற்போது Veeloor என்று ஆங்கிலத்தில் எழுத வலியுறுத்தப்பட்டுள்ளது. Vee என்பது வீ என்றே உச்சரிக்கப்படும். அப்படியெனில் வேலூர் இப்போது வீலூர் ஆகிவிடாதா? எழும்பூரை Ezhumboor என்று எழுதிவிட்டு, சோழிங்கநல்லூரை Solinganalloor என்று எழுதுவது என்ன அடிப்படையில்? சிறப்பு ழகரம் ஓரிடத்தும், லகரம் இன்னோரிடத்தும் வருவது பிழையாகாதா?
2018 - 19 ல் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, அதற்காக லட்சக்கணக்கில் நிதியும் ஒதுக்கப்பட்ட ஒரு மிக முக்கியமான பணியில் இத்தனை குளறுபடிகள் ஏன்? ஆயிரத்து பதினெட்டு பெயர்கள்தான் உண்மையில் மாற்றப்பட வேண்டியவையா? இல்லை இன்னும் பெயர்கள் விடுபட்டிருக்கின்றனவா? அவை அடுத்தடுத்து மாற்றம்பெற உள்ளனவா? அவற்றிலும் இதேபோலதான் குழப்பங்கள் வருமா? எந்த அடிப்படை அலகுகள் இது விசயத்தில்கையாளப்படுகின்றன? இதற்காக நியமிக்கப்ட்ட அறிஞர் குழுவினர் யார், யார்? வடமொழிப் பெயர்களைக் கொண்டுள்ள ஊர்ப்பெயர்களைத் தமிழ்ப் பெயர்களாக மாற்றி, அதன் பின்னர்தான் ஆங்கிலத்தில் எழுதும் முறை மேற்கொள்ளப்படுகிறதா?
இப்படி நமக்குள் நிறையக் கேள்விகளையும் இந்த நடவடிக்கை உருவாக்கிவிட்டிருக்கிறது. அத்தோடு நமக்கு எழும் ஆகப்பெரிய - மிக முக்கியமான கேள்வி இதுதான்: இதுவரையில் ஆங்கில உச்சரிப்பின்படி டமில்நாடு (Tamilnadu) என்றிருப்பது எப்போது
தமிழின் தன்மையோடு, தமிழ் மணம் கமழ Thamizhnaadu என்று ஆகப்போகிறது?
===சோழ.நாகராஜன்====