சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தர ராசன், மாநிலப் பொதுச்செய லாளர் ஜி. சுகுமாறன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறி யிருப்பதாவது:
தொழிற்சங்கத்தை ஏற்க மறுக்கும் சாம்சங்!
7.10.2024 அன்று தொழிலாளர்துறை துணை ஆணையர் முன்பு நடந்த பேச்சு வார்த்தையில் சாம்சங் நிர்வாகம் தொழிற் சங்கத்தை ஏற்கவோ, அதனோடு பேசவோ முடியாது என்று கூறிவிட்டது. அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைப்படி தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையை சாம்சங்கில் அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் நிர்வாகத்தின் நிலை.
அமைக்கப்பட்டுள்ள சங்கத்தினை விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டிய தொழிலாளர் துறை 105 நாட்களாகியும் கிடப்பில் போட்டுள்ளது, மனுவை நிராகரிக்கவும் இல்லை; இவையிரண்டுமே நிர்வாகம் ஆலைக்குள் சிலரைக் கொண்ட ஒரு போட்டி அமைப்பாக “பணியாளர் குழுவை” அமைப்பதற்கான அவகாசத்தை வழங்குவதற்காகத்தான்.
போராட்டம் ஊதிய உயர்வுக்கானது மட்டுமல்ல!
தொழிலாளர்கள் எழுப்பியுள்ள கோரிக்கைப்பட்டியல் மீது நிதானமாக பேசிக் கொள்ளலாம் என்று தான் தொழிற்சங்கம் கூறுகிறது. வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுவதற்கான உடனடி நிபந்தனை ஊதிய உயர்வோ இதர கோரிக்கைகளோ அல்ல.
7.10.2024 அன்று முதல்வர் ஆணைப்படி தொழில்துறை, தொழிலாளர் துறை, சிறுதொழில் துறை ஆகிய மூன்று துறை அமைச்சர்கள் தொழிற்சங்கத்தை அழைத்தனர். இதற்கு முன்பாகவே நிர்வாகத்தோடு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர் களின் கோரிக்கைகளோடு தான் வந்தார். கம்பெனியின் கோரிக்கையான ‘வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெறுவது, தொழிற் சங்கத்தோடு பேசமாட்டோம்; எங்கள் தொழிலாளர்களோடுதான் பேசுவோம்’ என்ற நிர்வாகத்தின் கோரிக்கை களைத்தான் அமைச்சர்கள் வலியுறுத்தி னர். முழுக்க முழுக்க கம்பெனியின் பிரதிநிதிகளாகவே அமைச்சர்கள் நடந்து கொண்டனர்.
சிஐடியுவை வெளியேறச் சொன்ன அமைச்சர்கள்!
‘சங்கம் அமைக்கும் சட்ட உரிமையை மதித்து, பெரும்பான்மைத் தொழிலாளர் களோடு பேசவேண்டும்’ என்ற கூட்டுபேர உரிமையை சாம்சங் நிறுவனம் மறுப்பதை ஏற்றுக் கொண்டுதான் அமைச்சர்கள் பேசினர்.
‘ஒருகட்டத்தில் சிஐடியு ஏன் தலையிட வேண்டும்?’ என்றும்; ‘வெளியாட்களாகிய நீங்கள் இருவரும் இல்லாமல் தொழி லாளர்கள் மட்டும் பேசட்டுமே!’ என்று பகிரங்கமாக கூறினர். தொழிற்சங்கம் அமைப்பது பற்றியோ, கூட்டுப்பேர உரிமை பற்றியோ, தொழிற்சங்கத்தில் வெளியாட்கள் பொறுப்பில் இருக்க லாம் என்கிற சட்ட நிலைபற்றியோ அமைச்சர்களுக்கு உரிய புரிதல் இல்லை என்று தான் கருதவேண்டியுள்ளது. அமைச்சர்களின் நிலை சட்ட விரோதமாக வும், நிர்வாகத்திற்கு ஆதரவானதாகவும் இருந்த காரணத்தால் அவர்களின் ஆலோசனையை ஏற்கமுடியாது என்று தெரிவித்துவிட்டோம். நிர்வாகத்துடன் பேசிவிட்டு பிறகு மீண்டும் எங்களோடு பேசலாம் என்று கூறி எங்களை அனுப்பி விட்டு அமைச்சர்கள் செய்த செயல்கள் மிகவும் மோசமானதாகும். வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.
பேச்சுவார்த்தையில் நேர்மை, நாகரிகம் இல்லை!
தொழிற்சாலையில் வேலை நிறுத்தத் தை உடைக்கும் வகையில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் மிகச் சிறிய எண்ணிக்கை யிலான தொழிலாளர்களில் சிலரை நிர்வாகமே கோட்டைக்கு அழைத்து வந்துள் ளது. அவர்களை அமைச்சர் முன்னிலையில் கொண்டுபோய் நிறுத்தி ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறிக் கொள்கிற அடிமை சாசனத்தில் கையெழுத்துப் பெற்றுள்ளனர். சாம்சங் தொழிலாளர் கோரிக்கைகளின் மீது உடன்பாடு எட்டப்பட்டு விட்டது என்றும் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது என்றும் செய்தி களை அமைச்சர் அலுவலகங்களிலிருந்தே பரப்பினார்கள். இந்த நடவடிக்கைகளில் சூது, வாது, சூழ்ச்சி, சட்டவிரோதம் ஆகியவைதான் உள்ளன. நேர்மையோ, ஜனநாயக மாண்புக ளோ, பேச்சுவார்த்தை நாகரிகமோ இல்லை.
நீதிமன்றத்தைக் காட்டுவது குழந்தைத்தனமானது!
தொழிற்சங்கத்தின் ஒரே கோரிக்கை சங்கப்பதிவுதான் என்றும் அது நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் எதுவும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுவது அப்பட்டமான திசைத்திருப்ப லும், மழுப்பலுமாகும். சட்டப்படி பதிவு முடிந்தால் வழக்கு தானாகவே இல்லாமல் போகும் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். வேலைநிறுத்தத்தில் இருக்கிற தொழி லாளியை விட்டுவிட்டு யாரிடமோ பேசினால் வேலைநிறுத்தம் எப்படி முடிவிற்கு வரும்? புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் வேலை நிறுத்தத்தில் உள்ள தொழிற்சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதைச் சங்கம் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
ஒப்பந்தத்தில் அம்பலமான சாம்சங்கின் சுரண்டல்!
கேன்டீன் உணவு, கழிப்பறை வசதி, பஸ்வசதி, பணிச் சூழல், குறை தீர்க்கும் ஏற்பாடு போன்ற சாதாரண விஷயங்கள் கூட சாம்சங்கில் ஒழுங்காக இதுவரை இல்லை என்பதை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புரிந்துகொள்ள முடியும். ரூ. 5000 என்பது ஊதிய உயர்வே அல்ல. ‘உற்பத்தி ஊக்கத் தொகை’ என்றுதான் போடப்பட்டுள்ளது.
மிக உயர்வான ஊதியம் தருவதாக நிர்வாக மும் கூறுகிறது. அமைச்சரும் கூறுகிறார், அது உண்மையல்ல என்பதைத்தான் 1500 தொழிலாளர்கள் 30 நாட்களாக வெய்யில், மழை என்று பாராமல் ஊதியத்தை இழந்து நடத்துகிற போராட்டம் உணர்த்துகிறது. தொழி லாளர்கள் முட்டாள்களுமல்ல, எடுப்பார் கைப்பிள்ளைகளுமல்ல. சங்கத்தை அமைத்து சிஐடியுவுடன் இணைத்தது தொழிலாளர்களின் முடிவே தவிர, சிஐடியுவின் முடிவல்ல என்பதை முதலில் அமைச்சர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசு - அமைச்சர்களின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல!
தமிழக அரசும், முதல்வரும் அமைச்சர் களும் எடுத்துள்ள நடவடிக்கையும் ஏற்கத்தக்க தல்ல. காவல்துறையின் அத்துமீறல்களும், எல்லா இயக்கங்களுக்கும் அனுமதி மறுத்து, கைது செய்து வழக்குப் போடுவதும் ஜனநாயக உரிமைகளையும், சட்ட உரிமைகளையும் மதிக்காத மோசமான செயல்களாகும். சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு இவற்றை வன்மையாக கண்டிக்கிறது. வேலைநிறுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர சட்ட உரிமைகளை மட்டும் போராடும் தொழிலாளர்களுக்கு வழங்கினால் போதும் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.