tamilnadu

திரு.வி.க.நகர் குயப்பேட்டையில் ரூ.6 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடம் அமைச்சர் நேரு திறந்து வைத்தார்

திரு.வி.க.நகர் குயப்பேட்டையில்  ரூ.6 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடம்  அமைச்சர் நேரு திறந்து வைத்தார்

சென்னை, அக். 25 -  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திரு.வி.க.நகர் மண்டலம் குயப்பேட்டை படவட்டம்மன் கோயில் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.5.96 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார். 1,473 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தில் 13 வகுப்பறைகள், அறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வகங்கள், நூலகம், கலையரங்கம் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. பள்ளியில் பயிலும் 354 மாணவர்களுக்கு புத்தகப்பை, வாட்டர் பாட்டில், நோட்டுப் புத்தகம், பேனா தொகுப்பும், 28 ஆசிரியர்கள் மற்றும் 10 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கினார். தற்போது சென்னை பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்வதாக அமைச்சர் தெரிவித்தார். அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி பள்ளிகள் தனியாருக்கு நிகரான வசதிகளுடன் கட்டப்படுவதால் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறி னார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு, பெரம்பூர் நெடுஞ்சாலை ஜமாலியா பகுதியில் ரூ.9.64 கோடி மதிப்பீட்டில் 11 கடைகளுடன் கூடிய புதிய வணிக வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி னார். மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பி னர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.