சென்னை:
எழுத்தாளர் இளவேனில் தனி மனிதராக இல்லாமல் தத்துவத்தின் மனிதராக இருந்தார் என்று தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.
எழுத்தாளர் இளவேனில் நினைவேந்தல் நிகழ்வு புதனன்று (ஜன.27) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு உருவப்படத்தை திறந்து வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இளவேனில் மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் நம்மிடையே உலவிக்கொண்டிருக்கிறது; அவரது புத்தகங்கள் பாடமாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. தந்தை பெரியார், பேராசான் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர் ஆகிய மூவரின் தத்துவங்களையும் முன்னெடுத்தவர். அவர் தனிமனிதராக இல்லாமல் தத்துவத்தின் மனிதராக இருந்தார்” என்றார்.
வீரியம் மிக்க எழுத்தாளர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிடுகையில், “வெடிகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்; புத்தகங்கள் திறக்கும்போதெல்லாம் வெடிக்கும் என்பார்கள். அத்தகைய எழுத்தாளர் இளவேனில்” என்றார்.வி.பி.சிந்தனை குருவாக, தோழனாக கொண்டவர் இளவேனில். பாரதியைப் பற்றி நூல் எழுதிக் கொண்டிருக்கையில் இறந்து விட்டார். பாசிச குணம் கொண்ட மதவாத அரசியலை எதிர்த்து மகத்தான போராட்டம் நடைபெறும் காலத்தில் வீரியமிக்க எழுத்தாளர் இளவேனில் மறைவு பேரிழப்பு” என்றும் கூறினார்.
பதிப்புத்துறைக்கு தனி அமைப்பு
“இளவேனில் சிரமப்பட்டதுபோன்று இளம் வீரியம்மிக்க எழுத்தாளர்கள் பலர் தங்களது நூல்களை வெளிக்கொண்டு வர முடியாமல் சிரமப்படுகின்றனர். அத்தகைய இளம் படைப்பாளிகளே தமிழை உயிர்ப்பித்து பாதுகாத்து வருகின்றனர் என்றும் இளம் எழுத்தாளர்களின் நூல்களை கொண்டு வந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். கடும் நெருக்கடியில் உள்ள பதிப்பாளர்களை பாதுகாக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பன்முகத்தன்மை..
நிகழ்வுக்கு தலைமை தாங்கி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, இளவேனில் கொள்கை பிடிப்பு மிக்கவர். எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், விமர்சகர், இயக்குநர், ஓவியர் என பன்முகத்தன்மை கொண்டவர்” என்றார்.
மார்க்சிய நோக்கில்
“சமூகத்தை அறிவியல் பூர்வமாக மார்க்சிய நோக்கில் அணுகியவர். சாதி ஒழிப்பில் தீராத வேட்கை கொண்டிருந்தவர். மாக்சிம் கார்க்கியை உயர்த்தி பிடித்தவர்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.