tamilnadu

img

மூடநம்பிக்கை பேச்சு - மகாவிஷ்ணு கைது!

வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் பங்கேற்று பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவர், அறிவியலுக்கு புறம்பான அபத்தமான கருத்துக்களை உள்ளடக்கிய உரையை பள்ளி மாணவர்களிடம் பகிர்ந்துள்ளார். அப்போது அந்த பள்ளியில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் அவரது உரைக்கு ஆட்சேபனை தெரிவித்தபோது, அந்த ஆசிரியரையும் அனைவரின் முன்னிலையிலும் மிகவும் தரக்குறைவான வார்த்தையில் பேசியதோடு, மாவட்ட கல்வி முதன்மை அதிகாரியின் அனுமதியின் பேரிலேயே, பள்ளி நிகழ்ச்சியில் தான் பங்கேற்று உரையாற்றுவதாகவும் அந்த பேச்சாளர் அவரை மிரட்டியுள்ளார். அதே போல், மகாவிஷ்ணு சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களிடமும் மூடநம்பிக்கை பேச்சை பகிர்ந்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாகவும், மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசியதாகவும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், மகா விஷ்ணு மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் (பிரிவு 192), சமூகத்தில் வெறுப்பான தகவகளை பரப்புதல் 196(1)(a), வேண்டுமென்றே ஒருவரை அவமதித்து, அமைதியைக் குலைக்க அல்லது குற்றத்தைச் செய்ய தூண்டுதல் (352), 353 (2) மற்றும் 92(a) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.