கொடிக்கம்பங்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 27.01.2025 அன்று கொடிக்கம்பங்கள் குறித்து வழங்கியுள்ள தீர்ப்பு அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமையையும், ஜனநாயகத்தையும் மறுப்பதாகும். நீதித்துறையின் அத்துமீறலும் ஆகும். அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களோ, விளம்பர பலகைகளோ பொதுமக்களுக்கு இடையூறாகவோ, இடைஞ்சலாகவோ இருக்கும் பட்சத்தில் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு நிர்வாக ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது அமலில் இருக்கின்றன. அவை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றோ போதுமானதாக இல்லை என்றோ நீதிமன்றம் கருதும்பட்சத்தில் முறையாக அமல்படுத்துவதற்கும், தேவையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதை யாரும் கேள்விக்குள்ளாக்க முடியாது. ஆனால், ஒட்டுமொத்தமாக பொது இடங்களில் எங்குமே கொடிக்கம்பங்கள் வைக்கக் கூடாது என்பது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் குறித்த 19 (1) (a) வை மீறுவதாகும்.
அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும், தத்துவத்தையும் பொதுமக்களிடம்தான் சொல்ல வேண்டியிருக்கும். அது ஒரு இடையறாத பணி. அதை மறுப்பது அரசியல் கட்சிகள் அற்ற நாட்டை உருவாக்குவதற்கு சமமாகும். மேலும், ஒரு அரசியல் கட்சி தன்னுடைய இடத்தில் கொடிக்கம்பம் நிறுவுவதாக இருந்தாலும் நிர்வாக அனுமதி பெற வேண்டுமென்பது நீதிமன்றங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு ஆணைகள் வழங்கலாம் என்று கருதுவதாகும். ஒரு தனியார் இடத்தில் சட்டத்திற்குட்பட்ட எதுவும் செய்து கொள்ளலாம் என்கிற போது கொடிமரத்திற்கும் மட்டும் நிர்வாக அனுமதி பெற வேண்டுமென்பது ஜனநாயகம் குறித்த சகிப்புத்தன்மையற்ற சிந்தனையாகும்.
நவீன தாராளமயக் கொள்கைகள் சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் தீவிரமாக்கிக் கொண்டிருக்கும் காலத்தில் அரசமைப்பின் அங்கங்கள் அவற்றிற்கு துணை போகும் வகையில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிப்பது, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் இயக்கங்கள் - போராட்டங்கள் நடத்தச் சொல்வது, மக்களிடையே பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மறுப்பது என்று பாதிக்கப்பட்ட மக்கள் போராடுவதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது வழக்கமாக உள்ளது. நிர்வாக அமைப்புகளின் அதே மனநிலையிலிருந்து நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.
எனவே, உயர்நீதிமன்றம் 27.01.2025ல் தான் வழங்கிய கொடி மரங்கள் குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.